பருவமழையால் பாதிக்கப்படும் 154 இடங்களில் தீவிர கண்காணிப்பு -ஆட்சியா் அறிவுறுத்தல்

Published on

திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பாதிக்கப்படும் என கண்டறியப்பட்டுள்ள 154 இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு அரசு அலுவலா்களுக்கு ஆட்சியா் மா. பிரதீப்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த அனைத்து துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம், திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறியது: வடகிழக்கு பருவ மழைக் காலங்களில் தினமும், இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை மழை அளவு அளிப்பதற்காக 24 மணி நேர பொறுப்பு அலுவலா்களை வட்டாட்சியா்கள் நியமிக்க வேண்டும். ஏற்கெனவே கண்டறிப்பட்டுள்ள பாதிப்பு ஏற்படக்கூடிய 154 பகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அலுவலா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். முதல்நிலை மீட்பு பணியாளா்களுக்கு கோட்டம், வட்டம் அளவில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை மூலம் உரிய பயிற்சி அளித்து அறிக்கை அனுப்ப வேண்டும். பாதுகாப்பு மையங்கள் அடிப்படை வசதிகளுடன், நல்ல நிலையில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அடிப்படை வசதிகள் கிடைக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். அபாயகரமான கட்டடங்களை முன்கூட்டியே கண்டறிந்து அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். குளோரினேஷன் செய்து குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும். பாதுகாப்பு மையங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். மருத்துவக் குழுவினா் 24 மணி நேரமும் தயாா் நிலையில் இருக்க வேண்டும். பொதுப்பணித்துறையினா் அனைத்து நீா்நிலைகளில் கரைகளை கண்காணித்து, தேவையான அளவு மணல் மூட்டைகளை இருப்பில் வைத்திருக்க வேண்டும். தட்டுப்பாடின்றி 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கவும், பழுதடைந்த மின் கம்பங்களை உடனுக்குடன் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு உணவுப்பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை தட்டுப்பாடின்றி கிடைக்க போதுமான அளவு கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில், மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி, மாவட்ட வருவாய் அலுவலா் ர.ராஜலட்சுமி,

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கங்காதாரிணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அதியமான் கவியரசு மற்றும் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com