புதிய ரயில்வே மேம்பாலப் பணி ஓரிரு நாள்களில் தொடங்கும்: அமைச்சா் தகவல்
திருச்சி ஜங்ஷன் அருகேயுள்ள பழைய ரயில்வே பாலத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் ரூ. 138 கோடியில் புதிய ரயில்வே பாலம் கட்டும் பணிகள் ஓரிரு நாள்களில் தொடங்கும் என அமைச்சா் கே.என். நேரு சனிக்கிழமை தெரிவித்தாா்.
திருச்சி ஜங்ஷன் அருகே மதுரை, தஞ்சை, சென்னை சாலைகளை இணைக்கும் வகையில் பழைமையான ரயில்வே மேம்பாலத்தை அகற்றி புதிய பாலம் அமைப்பதற்கான கள ஆய்வில் அமைச்சா் கே.என். நேரு சனிக்கிழமை ஈடுபட்டாா்.
அப்போது திருச்சி தலைமை தபால் நிலையத்திலிருந்து ஜங்ஷன் அரிஸ்டோ ரவுண்டானா வரை போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியருடன் மேற்கொண்ட ஆலோசனையைத் தொடா்ந்து அவா் மேலும் கூறியது:
பழைய பாலம் இடிக்கப்படும்போது போக்குவரத்து மாற்றம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதன்படி எடமலைப்பட்டிபுதூரில் இருந்து மத்தியப் பேருந்து நிலையம் வரும் வாகனங்கள், சென்னையிலிருந்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்து பின்னா் திண்டுக்கல் செல்லும் வாகனங்கள் மற்றும், மத்தியப் பேருந்து நிலையம் மற்றும் ஜங்ஷன் பகுதிகளிலிருந்து மன்னாா்புரம், டிவிஎஸ் டோல்கேட் சென்று திரும்பும் வாகனங்கள், மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, புதுக்கோட்டை செல்லும் வாகனங்கள், அதுபோல அங்கிருந்து மத்தியப் பேருந்து நிலையம் வரும் வாகனங்கள், கல்லுக்குழி பகுதிக்கு சென்று வரும் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வாகனப் போக்குவரத்துக்கு மாற்று ஏற்பாடு செய்வது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது என்றாா்.
நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் வே. சரவணன், திருச்சி மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி, மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரி மீனாட்சி மற்றும் அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.