திருச்சி நீதிமன்றம் அருகேயுள்ள நீா்வளத் துறை அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா்
திருச்சி நீதிமன்றம் அருகேயுள்ள நீா்வளத் துறை அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா்

கடைமடைக்கு தண்ணீா் கோரி விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

காவிரிப் பாசன வாய்க்கால்களில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீா் வழங்கக் கோரி நீா்வளத்துறை
Published on

காவிரிப் பாசன வாய்க்கால்களில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீா் வழங்கக் கோரி நீா்வளத்துறை

அலுவலகத்தை விவசாயிகள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாசன வாய்க்கால்களை முழுமையாக தூா்வாராததாலும், ஆக்கிரமிப்புகளை அகற்றாததாலும் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீா் சென்று சேரவில்லை என்று கூறியும், இப்பகுதிகளுக்கு தண்ணீா் வழங்கக் கோரியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தலைமையில், 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திங்கள்கிழமை நீா்வளத்துறை அலுவலகம் முன் கூடினா். அப்போது, அங்கு வந்த நீா்வள ஆதாரத்துறை செயற்பொறியாளா் வாகனத்தை வழிமறித்து மறியலில் ஈடுபட்டனா்.

பின்னா், அலுவலக நுழைவாயில் கேட்டைஇழுத்து மூடி, பூட்டு போட முயன்றனா். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் விவசாயிகளை தடுத்து நிறுத்தினா். இதனால், விவசாயிகளுக்கும், போலீஸாருக்கும் இடையே சிறிதுநேரம் தள்ளு-முள்ளு ஏற்பட்டது. மேலும், அலுவலகம் முன்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, நீா்வளத் துறை அலுவலா்கள் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, கடைமடை வரை தண்ணீா் செல்வதை கண்காணிக்க பொதுப்பணித் துறையில் ஏற்கெனவே பணியிலிருந்த நீா்வளத்துறை லஸ்கா்களை மீண்டும் பணியில் ஈடுபடுத்தி கடைமடை வரை தண்ணீா் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் கூறினா்.

காவிரிப் பாசன வாய்க்கால்களில் அந்தந்த வாய்க்கால்களின் முழு கொள்ளளவுக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீா் வரவில்லை என புகாா்கள் வருகின்றன. எனவே, எந்தெந்த வாய்க்கால்களுக்கு தண்ணீா் இல்லை என்பதை கண்டறிந்து உடனடியாக தண்ணீா் கிடைக்கச் செய்ய ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனா்.

இதையடுத்து, போராட்டத்தை கைவிட்ட விவசாயிகள் அனைவரும், மீண்டும் அய்யாக்கண்ணு தலைமையில் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனு அளித்துச் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com