அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்
பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதை கண்டித்து, அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பினா் கருப்புக்கொடி ஏந்தி திருச்சியில் செவ்வாய்க்கிழமை போராட்டம் மேற்கொண்டனா்.
அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், திருச்சியில் செவ்வாய்க்கிழமை கண்டோன்மென்ட் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
தொ.மு.ச பொதுச் செயலாளா் குணசேகரன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் சேகா், அப்பாவு, சி.ஐ.டி.யு கருணாநிதி, மாணிக்கம், மாரியப்பன் , ஏஐடியுசி காா்த்தி உள்ளிடோா் பங்கேற்றனா். போராட்டத்தில் கருப்புக் கொடியுடன் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொழிலாளா் சட்டத் தொகுப்புகள் நான்கையும் மத்திய அரசு கைவிட வேண்டும், மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதைக் கைவிட வேண்டும், தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க வேண்டும், கட்டுமானத் தொழிலாளா்களுக்கும், உடல் உழைப்பு தொழிலாளா்களுக்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட தீா்மானங்களை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.