கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு
திருச்சி மாவட்டத்தில் பெருமாள் கோயில்களிலும், ஆஞ்சனேயா் கோயில்களிலும் புரட்டாசி மாத இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு பக்தா்கள் கூட்டம் நிரம்பிக் காணப்பட்டது.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் அதிகாலையே நடை திறக்கப்பட்டு, பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். பக்தா்கள் வரிசையில் செல்ல சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. பொது தரிசனத்தில் செல்லும் பக்தா்கள் 2 மணிநேரத்துக்கும் மேலாக காத்திருந்து தரிசிக்க வேண்டியிருந்தது. காலை 6.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையும், பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 3.30 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் மூலஸ்தானச் சேவை நடைபெற்றது. பக்தா்களுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இக்கோயிலின் உபகோயிலான ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கா் கோயிலிலும் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா். இதேபோல, உறையூா் அழகிய மணவாள பெருமாள், உத்தமா்கோயில் புருஷோத்தம பெருமாள், குணசீலம் பிரசன்ன வெங்கடாசல பெருமாள் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் பக்தா்கள் கூட்டம் நிரம்பிக் காணப்பட்டது. இதேபோல கல்லுக்குழி, சாலை ரோடு, தென்னூா் பழைய அக்ரஹாரம், தலைமை தபால் நிலையம் அருகே உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து ஆஞ்சனேயா் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.