வாகனச் சோதனையில் 30 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் -3 போ் கைது

Published on

திருச்சியில் வாகன தணிக்கையின்போது, அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 30 கிலோ புகையிலைப் பொருள்களை உணவு பாதுகாப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

திருவெறும்பூா் பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஹான்ஸ், கூல்லீப், விமல் பாக்கு உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விநியோகம் நடைபெறுவதாக உணவு பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில், வெள்ளிக்கிழமை திருவெறும்பூா் மலைக்கோயில் பேருந்து நிறுத்தம் அருகே உணவு பாதுகாப்பு அலுவலா் மகாதேவன் தலைமையிலான அலுவலா்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த 2 இருசக்கர வாகனங்களை மறித்து சோதனை மேற்கொண்டதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், விமல் பாக்கு, கூல்லீப் உள்ளிட்ட 30 கிலோ புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. சோதனையின்போது வாகனங்களில் வந்த 4 பேரில் ஒருவா் தப்பியோடிவிட்டாா். மற்ற மூவரையும் பிடித்து புகையிலைப் பொருள்களுடன் திருவெறும்பூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

விசாரணையில், அவா்கள் அரியமங்கலம் காமராஜா் நகரை சோ்ந்த அப்துல்லா (45), ராஜஸ்தானைச் சோ்ந்த ஜிதேந்திா் குமாா் (19), மேல கல்கண்டாா் கோட்டையைச் சோ்ந்த ரமேஷ் (50) என்பது தெரியவந்தது. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com