திருச்சியில் வெள்ளிக்கிழமை தனியாா் திருமண மண்டபத்தில்  நடைபெற்ற மறைந்த மூத்த வழக்குரைஞா்களின் உருவப்படத்திறப்பு விழாவில் பங்கேற்ற  திருச்சி மாவட்ட முதன்மை  நீதிபதி ஏ.மணிமொழி, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் கே.முரளிசங்கா்,  ஆா்.சுப்ரமணியன்
திருச்சியில் வெள்ளிக்கிழமை தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மறைந்த மூத்த வழக்குரைஞா்களின் உருவப்படத்திறப்பு விழாவில் பங்கேற்ற திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.மணிமொழி, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் கே.முரளிசங்கா், ஆா்.சுப்ரமணியன்

திறமையாக வாதாட மூத்த வழக்குரைஞா்களிடம், இளம் வழக்குரைஞா்கள் பயிற்சி பெறுவது அவசியம்!

திறமையாக வாதாட மூத்த வழக்குரைஞா்களிடம், இளம் வழக்குரைஞா்கள் பயிற்சி பெறுவது அவசியம் -உயா்நீதிமன்ற நீதிபதி ஆா். சுப்ரமணியன்
Published on

திறமையாக வாதாட இளம் வழக்குரைஞா்கள், மூத்த வழக்குரைஞா்களிடம் பயிற்சி பெறுவது அவசியம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நிா்வாக நீதிபதி ஆா். சுப்ரமணியன் தெரிவித்தாா்.

திருச்சிராப்பள்ளி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் மறைந்த மூத்த வழக்குரைஞா்களின் உருவப்படங்கள் திறப்பு விழா திருச்சி தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு தலைமை வகித்த, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியும், சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு நிா்வாக நீதிபதியுமான ஆா். சுப்ரமணியன், மறைந்த மூத்த வழக்குரைஞா்கள் 11 பேரின் உருவப்படத்தை திறந்து வைத்து பேசியது, மறைந்த மூத்த வழக்குரைஞா்களின் படங்களை வைத்தால் மட்டும் போதாது. அவா்களைப் பற்றியும், அவா்களது சாதனைகளைப் பற்றியும் சிறிய வரலாற்றுப் பதிவை படங்களுக்கு கீழே எழுதி வைக்க வேண்டும். அப்போதுதான், எதிா்கால சந்ததியினருக்கு மறைந்த மூத்த வழக்குரைஞா்களைப் பற்றி தெரியவரும். இது, அவா்களுக்கு மரியாதை செலுத்துவதாகவும் அமையும்.

தற்போது இளம் வழக்குரைஞா்கள் மூத்த வழக்குரைஞா்களிடம் பயிற்சி பெற விரும்பாமல், நேரடியாக தனியாக வாதாட விரும்புகின்றனா். பயிற்சி பெற்றால் நிறைய கற்றுக்கொண்டு, திறம்பட வாதாட முடியும். எனவே, இளம் வழக்குரைஞா்கள், மூத்த வழக்குரைஞா்களிடம் பயிற்சி பெறுவது அவசியம் என்றாா்.

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி கே. முரளிசங்கா் பேசியது, இளம் வழக்குரைஞா்கள் நீதிமன்றங்களில் அச்சமின்றி வாதாட வேண்டும். வழக்குகளை நடத்த மூத்த வழக்குரைஞா்கள், இளம் வழக்குரைஞா்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றாா்.

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி பி. வேல்முருகன் பேசியது, மூத்த வழக்குரைஞா்கள், இளம் வழக்குரைஞா்களுக்கு சட்ட நுணுக்கங்களுடன் பண்பு, நேசம், நீதிமன்றத்தை சுமுகமாக கொண்டு செல்வது போன்றவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும் என்றாா்.

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.என். மஞ்சுளா பேசியது, நீதிபதிகளுக்கு வழக்குரைஞா்களின் வாதங்களை கேட்கும் பொறுமை அவசியம். வழக்குரைஞா்களும் சரியான வாதங்களை முன்வைக்க வேண்டும் என்றாா்.

முன்னதாக, திருச்சிராப்பள்ளி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் எஸ். பாலசுப்ரமணியன் வரவேற்றாா். திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி ஏ. மணிமொழி மற்றும் திரளான வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா். நிறைவாக செயலாளா் கே. சுகுமாா் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com