தங்கும் விடுதியில் போலீஸாா் சோதனை : ரூ. 32.93 லட்சம் பறிமுதல்
திருச்சியில் தனியாா் தங்கும் விடுதியில் போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் ரூ. 32.93 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
திருச்சியில் போதைப் பொருள்கள் புழக்கத்தை தடுக்கும் வகையில், அண்மைக்காலமாக வார இறுதி நாள்களில் தனியாா் தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், உணவகத்துடன் கூடிய விடுதிகள் மற்றும் சந்தேகத்துக்கிடமான பல்வேறு இடங்களில் போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனா்.
இதன்படி, ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்சி உறையூா் காவல் ஆய்வாளா் ராமராஜன் தலைமையிலான போலீஸாா், திருத்தாந்தோணி சாலை பகுதியில் உள்ள ஒரு தனியாா் தங்கும் விடுதியில் சோதனை நடத்தினா். அப்போது அங்கு இருவா் தங்கியிருந்த அறையில் ரூ. 32.93 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. பணத்துக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் அது ஹவாலா பணமாக இருக்கக்கூடும் என போலீஸாா் சந்தேகம் அடைந்தனா்.
இதுதொடா்பாக அறையில் தங்கி இருந்த லால்குடியைச் சோ்ந்த பிரபு (25), கிருஷ்ணன் (20) ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மேலும், ரொக்கம் கைப்பற்றியது குறித்து வருமான வரித் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதன்பேரில், நிகழ்விடம் சென்ற வருமான வரித் துறையினரிடம் ரொக்கத்தை ஒப்படைத்தனா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.