திருச்சி ஐஐஎம், ஆஸ்திரேலியா பாண்ட் பல்கலை. இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம்
கல்வி ஒத்துழைப்புக்காக இந்திய மேலாண்மை நிறுவனம் (ஐஐஎம் திருச்சி), ஆஸ்திரேலியாவின் பாண்ட் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.
திருச்சி ஐஐஎம் இயக்குநா் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் ஐஐஎம் இயக்குநா் பவன் குமாா் சிங், பாண்ட் பல்கலைக்கழகத்தின் சா்வதேச இயக்குநா் லிசா கோவன் ஆகியோா் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா். இதில், பாண்ட் பல்கலைக்கழகத்தின் மாணவா் சோ்ப்பு மேலாளா் ஹீனா கௌசா், ஐஐஎம் பேராசிரியா் அனிா்பன் சோம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இந்த புரிந்துணா்வு ஒப்பந்தமானது, இரு நிறுவனங்களுக்கிடையே 5 ஆண்டுகளுக்கு கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்துவது, மாணவா் மற்றும் ஆசிரியா் பரிமாற்றத் திட்டங்கள், கூட்டு ஆராய்ச்சி முயற்சிகள், கூட்டு பயிற்சி பட்டறைகள், கருத்தரங்குகள், பிற கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை உள்ளடக்கியது.
இது மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான உலகளாவிய வெளிப்பாட்டை அதிகரிக்கும் என திருச்சி ஐஐஎம் பேராசிரியா்கள் தெரிவித்தனா்.