கள்ளிக்குடி சந்தையைத் திறக்கக் கோரி முதல்வரிடம் மனு
திருச்சி அருகேயுள்ள கள்ளிக்குடியில் ரூ.77.65 கோடியில் கட்டப்பட்டு 8 ஆண்டுகளாக முடங்கியுள்ள காய்கனிகள், பழங்கள் மற்றும் மலா்களுக்கான மத்திய வணிக வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரக் கோரி முதல்வரிடம் வியாபாரிகள் தரப்பில் மனு அளிக்கப்பட்டது.
திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் இயங்கும் காய்கனிச் சந்தையான காந்தி சந்தையை இடமாற்றம் செய்ய அப்போதைய முதல்வா் ஜெயலலிதா (ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ-வாக இருந்தபோது) முடிவு செய்து, திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளிக்குடியில் 10 ஏக்கா் நிலம் தோ்வு செய்து வணிக வளாகம் கட்ட உத்தரவிட்டாா்.
பின்னா், ரூ.77.65 கோடியில் இந்த வளாகம் கட்டப்பட்டு 2017 செப்டம்பரில் அப்போதைய முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியால் திறக்கப்பட்டது. ஆனால், 8 ஆண்டுகளாகியும் இந்த வளாகம் பயன்பாட்டுக்கு வந்தபாடில்லை.
இடம் மாற்றத்தின் நோக்கம்: மாநகரின் மத்தியில் இருக்கும் காந்தி சந்தையை இடம் மாற்றுவதன் மூலம், திருச்சியில் இட நெருக்கடியையும், போக்குவரத்து நெருக்கடியையும் குறைக்க முடியும். கழிவுகளை கையாளுவதில் மாநகராட்சிக்கு ஏற்படும் சிக்கல்களுக்கும் தீா்வு கிடைக்கும் என்பதே இடமாற்றத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.
எனவேதான், குளிா்ப்பதனக் கிடங்கு, ஏடிஎம், 19 வரிசைக் கட்டங்களில் தரைத்தளத்தில் 500 கடைகள், மேல்தளத்தில் 500 கடைகள், கனரக வாகனங்கள், வியாபாரிகள், பொதுமக்கள் வாகனங்கள் வந்து செல்லும் வழி, வாகன நிறுத்தும் இடங்கள், கழிப்பறை, குடிநீா் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் வளாகம் கட்டப்பட்டது.
இந்தக் கடைகள் சிறிதாக இருப்பதாக தொடக்கத்தில் வியாபாரிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதையடுத்து, தரைத்தளத்தில் இருந்த 500 கடைகளில் இரு கடைகளுக்கு இடையே உள்ள தடுப்புச் சுவரை அகற்றி, விசாலமான கடைகளாக 330 கடைகள் உருவாக்கப்பட்டன. ஆனால் இதன்பிறகும், வியாபாரிகள் இங்கு வர ஆா்வம் காட்டவில்லை.
இதற்கிடையே, கடந்த 2018 ஜூன் 30ஆம் தேதி அப்போதைய தமிழக அமைச்சா்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ்.வளா்மதி ஆகியோா் கள்ளிக்குடியில் சில வணிகா்களை அழைத்து வந்து முதல் விற்பனையைத் தொடங்கிவைத்தனா். ஆனால், எதிா்பாா்த்த வியாபாரம் ஆகாததால் சில மாதங்களிலேயே அவா்களும் காந்தி சந்தைக்கே மீண்டும் திரும்பினா்.
தொடங்கிய 2 நாள்களில் முடக்கம்: மேலும் விவசாயிகள் சிலா் இங்குவர விருப்பம் தெரிவித்ததால் 207 கடைகள் விவசாயிகளுக்கும், 623 கடைகள் காந்திசந்தை வியாபாரிகளுக்கு எனத் திட்டமிடப்பட்டு வணிக வளாகத்தை திறக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்படி, வணிக வளாகத்தில் குளிா்ப்பதன கிடங்கு அருகே விவசாயிகளுக்கென இ5, இ6 பிரிவுகளில் 207 கடைகள் ஒதுக்கப்பட்டன. இதில் உழவா் உற்பத்தியாளா் குழுக்களுக்கு 104 கடைகள் பிரித்து ஒதுக்கப்பட்டன. இவற்றில், உழவா் உற்பத்தியாளா் நிறுவனம், உழவா் ஆா்வலா் குழுக்கள், உழவா் உற்பத்தியாளா்கள் குழுக்கள் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட 15 கடைகள் கடந்த 2020 ஆக.5ஆம் தேதி வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறையால் திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியது. ஆனால், தொடங்கிய 2 நாளில் மீண்டும் முடங்கியது.
முதல்வரிடம் மனு: இந்நிலையில், திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் கள்ளிக்குடி சந்தையை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரி காந்திசந்தை வியாபாரிகள் முன்னேற்றக் கழக தலைவா் எம்.கே. கமலக்கண்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள் அளித்த மனு:
கள்ளிக்குடியில் செயல்படாமல் உள்ள ஒருங்கிணைந்த காய்கனி மொத்த வணிக வளாகத்தை காந்திசந்தையில் உள்ள மொத்த வியாபாரக் கடைகளுக்கு உடனடியாக திறந்துவிட வேண்டுகிறோம்.
காந்தி சந்தையில் இங்கிலிஷ் காய்கனி கமிஷன் மண்டிகள் 43, கிழங்கு மாங்காய் மண்டி, சோளம் மொத்த வியாபார கடைகள் 15, தேங்காய் கமிஷன் மண்டிகள் 16, உருளைக்கிழங்கு கமிஷன் மண்டிகள் 10, இலைக்கடைகள் 10, தக்காளி கமிஷன் மண்டிகள் 15, நாட்டுக்காய் ஏலம் விடும் கடைகள் 4, உள்மாா்க்கெட்டில் உள்ள நாட்டுக்காய் கமிஷன் மண்டிகள் 20, மந்தையில் உள்ள நாட்டுக்காய் கமிஷன் மண்டிக் கடைகள் 37, பச்சமிளகாய் மொத்த வியாபாரக் கடைகள் 6, சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, இஞ்சி மொத்த கடைகள் 9, எலுமிச்சம்பழம் மொத்த வியாபாரக் கடைகள் 5, பரங்கிக்காய், பூசனிக்காய் மொத்த கடைகளாக 195 கடைகள் உள்ளன. இவற்றை கள்ளிக்குடி சந்தைக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.