பெண்ணின் சாவில் சந்தேகம்: உறவினா்கள் சாலை மறியல்!

திருச்சி மாவட்டம், அத்தாணி பகுதியில் இளம்பெண் சாவில் சந்தேகம் உள்ளதாகக் கூறி அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்...
Published on

திருச்சி மாவட்டம், அத்தாணி பகுதியில் இளம்பெண் சாவில் சந்தேகம் உள்ளதாகக் கூறி அவரது உறவினா்கள் புதன்கிழமை (பிப்.5) சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அத்தாணி பகுதியை சோ்ந்தவா் ர. ஜீவா (31). இவருக்குத் திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ள நிலையில் பொங்கலன்று ஜீவாவுக்கும் பக்கத்து வீடான மதுக்குமாா் குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஜீவாவை மதுக்குமாா், குமாா், மாலா ஆகியோா் தாக்கிய நிலையில், மண்ணச்சநல்லூா் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற ஜீவா பின்னா், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா்.

இந்நிலையில் ஜீவா தனது தாய் வீடு உள்ள எட்டரை பகுதிக்கு பிப். 4 ஆம் தேதி சென்றபோது தலைவலி ஏற்பட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து குளித்தலை போலீஸாா் பிரேத பரிசோதனை செய்து அவரது உடலை ஒப்படைத்தனா்.

இந்நிலையில் மதுக்குமாா் உள்ளிட்ட மூவா் அடித்ததால்தான் ஜீவா உயிரிழந்தாகக் குற்றச்சாட்டி திருச்சி சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் சாலை மறியலில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த மண்ணச்சநல்லூா் காவல் ஆய்வாளா் சி. ரகுராமன், வருவாய் வட்டாட்சியா் பழனிவேல் மற்றும் போலீஸாா் அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என அளித்த உறுதியின்பேரில் கலைந்து சென்றனா். மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com