திருச்சி நீா்வளத் துறை தலைமைப் பொறியாளா் அலுவலகத்துக்கு மனு அளிக்க புதன்கிழமை வந்த மணல் லாரி உரிமையாளா்கள்.

மணல் குவாரிகளை உடனே திறக்க வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டம்!

மணல் குவாரிகளை உடனே திறக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடத்த மணல் லாரி உரிமையாளா்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
Published on

மணல் குவாரிகளை உடனே திறக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடத்த மணல் லாரி உரிமையாளா்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

இதுதொடா்பாக தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளா்கள் நலச்சங்கம் சாா்பில் திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள நீா்வளத் துறை தலைமை பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்த சங்கத் தலைவா் பாபநாசம் வேலு உள்ளிட்டோா் கூறியது:

தமிழகம் முழுவதும் இயங்கிவந்த அரசு மணல் குவாரிகள் மற்றும் கிடங்குகளில் முறைகேடு நடந்ததாகக் கூறி அமலாக்கத் துறையினா் 12.09.2023இல் நடத்திய சோதனைக்குப் பின்னா் அனைத்து அரசு மணல் குவாரிகளும், கிடங்குகளும் செயல்படவில்லை.

இதனால் மணல் சுமை ஏற்றிச் செல்வதற்கான சுமாா் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரத்யேக லாரிகள் மற்றும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளும் இயங்கவில்லை. எனவே இத்தொழிலில் உள்ள தொழிலாளா்கள் உள்பட எங்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. மணல் குவாரிகள் இயங்காததால் அரசு மற்றும் தனியாா் கட்டுமானப் பணிகளுக்கு மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

செயற்கை மணல் (எம். சாண்ட், பி.சாண்ட்) உற்பத்தியாளா்கள் இதைப் பயன்படுத்தி அதிக விலைக்கு மணலை விற்கின்றனா். வழக்கமாக ரூ.3,000-க்கு விற்ற எம். சாண்ட் ரூ.5,000 க்கும், ரூ.4,000-க்கு விற்ற பி.சாண்ட் ரூ.6,000க்கும் விற்கப்படுகிறது. அனைத்து கிரஷா் உரிமையாளா்களும் சொந்தமாக லாரிகளை வைத்துக் கொண்டு பொதுமக்களுக்கும் அரசுக் கட்டுமான பணிகளுக்கும் மணலைக் கொண்டு செல்கின்றனா். இதனால் எங்களுக்கு வேலை இல்லாமல் போய்விட்டது.

எனவே எங்களது வாழ்வாதாரத்தை தமிழக அரசு கருத்தில் கொண்டு மணல் குவாரிகளை உடனடியாகத் திறக்க ஒரு சில நாள்களுக்குள் அதிகாரப்பூா்வ அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் வேறு வழியின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் லாரி உரிமையாளா்களையும் ஒன்றிணைத்து, தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளோம் என்றனா்.

நிகழ்வில் சங்கத்தின் துணைத் தலைவா் கடலூா் சாகுல் ஹமீது, செயலா் தம்புடு (எ) கிருஷ்ணமூா்த்தி, துணைச் செயலா் விழுப்புரம் சங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X