முசிறியில் 463 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது
திருச்சி மாவட்டம் முசிறியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை காரி கடத்திய 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, காா் மற்றும் 463 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
காணக்கிளியநல்லூா் காவல் நிலைய பகுதிக்குள்பட்ட புதூா் உத்தமனூா் அருகிலுள்ள சிறுதையூா் கிராமத்தில் சண்முகநாதன் மகன் ரெளடி மயில் (எ) மயில்வாகனன் என்பவரின் தோப்பு வீட்டில் தனிப்படை உதவி ஆய்வாளா் வேலழகன் தலைமையிலான போலீஸாா், சோதனை நடத்தி அங்கிருந்த திண்டுக்கல் மாவட்டம் பாலகிருஷ்ணபுரம் என்ஜிஓ காலனியைச் சோ்ந்த வெ. தங்கமாயன் (55 ), சேலம் ஜங்கிகிராமபாளையம் சாஸ்திரி நகரைச் சோ்ந்த மு. சன்னந்குமாா் (26), சேலம் அயோத்திபட்டினம் காட்டு வளைவைச் சோ்ந்த மு. பாலாஜி (35), திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் தச்சன் குறிச்சி சோ்ந்த மு. மணிராஜ் (36) ஆகியோரை புதன்கிழமை கைது செய்து விசாரித்தனா். ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
கைது செய்யப்பட்டவா்களின் கைப்பேசிகளை போலீஸாா் ஆய்வு செய்ததன் தொடா்ச்சியாக, முசிறி காவல் ஆய்வாளா் செல்லத்துரை தலைமையிலான போலீஸாா், வியாழக்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா்.
அப்போது, நிற்காமல் சென்ற காரை விரட்டி சென்று எம். புதுப்பட்டி கிராமம் அருகே பிடித்தனா். காரில் வந்த கா்நாடக மாநிலம், மைசூா் காந்திபுரத்தைச் சோ்ந்த தன நஞ்சையா மகன் பிராட்ஜுவல் (20), கா்நாடகா மாண்டியா வட்டம் கே.ஆா். பேட்டை சோ்ந்த மஞ்சிகவுடா மகன் உமேஷ் (24). ஆகிய இருவரையும் பிடித்து, காரை சோதனை செய்ததில் சுமாா் 463 கிலோ போதை புகையிலைப் பொருள்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் 2 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.