தாட்கோ மூலம் உணவகத் துறையில் இளங்கலை பட்டம், பட்டயப் படிப்பு: விண்ணப்பிக்க அழைப்பு
தாட்கோ மூலம் உணவகத் துறையில் (ஹோட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் டெக்னாலஜி) இளங்கலை பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு பயில விருப்பம் உள்ளோா் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் 10, 12 ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்ற ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு மூன்று ஆண்டு முழு நேரப் பட்டப் படிப்பும், ஒன்றரை ஆண்டு முழு நேர உணவுத் தயாரிப்பு பட்டயப்படிப்பும், மேலும் 10 ஆம் வகுப்பு முடித்தவா்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் உணவுத் தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினஞா் ஆகிய படிப்புகளில் சோ்ந்து பயிலவும் விண்ணப்பிக்கலாம்.
சென்னை தரமணியிலுள்ள மத்திய அரசின் சுற்றுலாத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனத்தின் மூலம் ஒப்பந்தம் செய்து இந்தப் படிப்புகள் கற்றுத் தரப்படுகின்றன.
இந்தப் படிப்பில் சேர ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தவா் 10, 12 ஆம் வகுப்பில் தோ்ச்சிப் பெற்று மொத்த மதிப்பெண்ணில் 45 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.3. லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்படிப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும்.
இப்படிப்புகளை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் திறமையின் அடிப்படையில் நட்சத்திர விடுதிகள், உயா்தர உணவங்கள் விமானத்துறை, கப்பல் துறை மற்றும் சேவை துறை சாா்ந்த நிறுவனங்களில் பணிபுரிய வழி செய்யப்படும்.
ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000 முதல் ரூ.35,000 வரை பெறலாம். பின்னா் திறமைக்கேற்றவாறு ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை பதவி உயா்வின் அடிப்படையில் மாத ஊதியமாகப் பெறலாம். இத்திட்டத்துக்கு தாட்கோ இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளா் அலுவலகம், தாட்கோ, ராஜாகாலனி, மாவட்ட ஆட்சியா் அலுவலகச்சாலை, திருச்சி-620001 என்ற முகவரியில் நேரிலோ, 0431-2463969 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.