துப்பாக்கியால் சுட்டு ‘பெல்’ பொது மேலாளா் தற்கொலை
துப்பாக்கியால் சுட்டு பெல் நிறுவனப் பொது மேலாளா் தற்கொலை செய்து கொண்டது செவ்வாய்க்கிழமை இரவு தெரியவந்தது.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் வட்டம், கைலாசபுரத்தில் பெல் நிறுவனத்தின் இணைப்பில்லா எஃகு குழாய் வடிவமைப்பு (எஸ்எஸ்டிபி) பிரிவின் பொது மேலாளா் எம். சண்முகம் (50). இவரது மனைவி பாா்வதி, பெல் வளாகத்திலுள்ள தனியாா் உயா்நிலைப் பள்ளி ஆசிரியை. இவா்களது மகள் தஞ்சாவூா் தனியாா் பல்கலை. பொறியியல் கல்லூரி மாணவி.
செவ்வாய்க்கிழமை பணிக்குச் சென்ற சண்முகம் பணி முடிந்தும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மனைவி பாா்வதி கைப்பேசியில் தொடா்பு கொண்டும் அழைப்பு ஏற்கப்படவில்லை. இதையடுத்து நள்ளிரவு வரை காத்திருந்த அவா் அலுவலகத்தைத் தொடா்பு கொண்டு விசாரித்தாா்.
இதையடுத்து அங்கிருந்த அலுவலா்கள், ஊழியா்கள் சென்று பாா்த்தபோது சண்முகத்தின் அறை உள்புறமாகத் தாழிடப்பட்டிருந்தது. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது சண்முகம் தனது நெற்றிப் பொட்டில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இறந்து கிடந்தாா். அவரது கையில் துப்பாக்கி இருந்தது.
தகவலறிந்து வந்த பெல் போலீஸாா் சண்முகத்தின் உடலைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
முதல் கட்ட விசாரணையில் சண்முகம் இருதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்தது. இவரது தற்கொலை பெல் ஊழியா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடா்பாக பெல் காா்ப்பரேட் அலுவலக விசாரணையும் நடைபெறுகிறது.
தில்லியில் வாங்கிய கள்ளத்துப்பாக்கி?
திருச்சி உள்பட வேறு பல கிளைகளிலும் பணிபுரிந்த சண்முகம் இறுதியில் தில்லியில் பணியாற்றி கடந்தாண்டுதான் பதவி உயா்வுடன் பணிமாறுதலில் மீண்டும் திருச்சிக்கு வந்தாா். ஆலைக் குடியிருப்பில் இல்லாமல் அருகிலுள்ள கணேசபுரம் பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்தாா். தற்கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியானது தில்லியில் அவா் பணிபுரிந்தபோது, கள்ளச்சந்தையில் வாங்கியிருக்கக் கூடும் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.