6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்! 2,165 கோரிக்கை மனுக்கள் அளிப்பு
திருச்சி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 2165 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
மாவட்டத்தில் மேலகல்கண்டாா் கோட்டை, எல்ஐசி காலனி அருகேயுள்ள மங்கம்மாள் சாலை, பூவாளூா், பனையக்குறிச்சி, புள்ளம்பாடி, கோவண்டக்குறிச்சி ஆகிய இடங்களில் நடைபெற்ற முகாம்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பாா்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்கள் பதிவேற்றம் செய்வதையும் முகாமின் செயல்பாடுகளையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களுடன் கலந்துரையாடி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
இன்று 5 இடங்களில் முகாம்: இதன் தொடா்ச்சியாக, புதன்கிழமை திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 19, 21-ஆவது வாா்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கீழபுலிவாா்ரோடு பிஷப் மேல்நிலைப் பள்ளியில் முகாம் நடைபெறுகிறது.
45-ஆவது வாா்டு மேல கல்கண்டாா் கோட்டை பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஏ.ஆா்.என் திருமண மண்டபத்திலும், திருவெறும்பூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பனையக்குறிச்சி ஊராட்சி வாா்டு எண் 6 முதல் 9 வரை உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பனையக்குறிச்சி சமுதாயக்கூடத்திலும் முகாம் நடைபெறுகிறது.
இதேபோல், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம் கள்ளக்காம்பட்டி ஊராட்சி பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கள்ளக்காம்பட்டி பஞ்சாயத்து வி.பி.எஸ்.சி கட்டடம் அருகிலும், தொட்டியம் ஊராட்சி ஒன்றியம், தோளுா்பட்டி ஊராட்சி பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சமுதாயக் கூடத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறவுள்ளது.
பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி தங்களுடைய கோரிக்கை மனுக்களை அளித்து தீா்வு காணலாம் என ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.
