கொணலை ஏரியில் பனை விதைகள் நடவு
மாநில மரத்தை காக்க திருச்சி மாவட்ட வனத் துறை சாா்பில் கொணலை ஏரியில் பனை விதைகள் நடும் பணி புதன்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தின் மாநில மரமான பனை மரத்தின் பெருமையை மீட்டெடுக்கவும், அதன் பயன்களை மக்களுக்கு கொண்டு செல்லவும் மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை மூலம் 404 ஊராட்சிகளில் ஒரு ஊராட்சிக்கு 5,000 பனை விதைகள் மற்றும் வனத் துறையின் மூலம் 50,000 பனை விதைகள் உள்ளிட்ட மொத்தம் 20 லட்சத்து 70 ஆயிரம் பனை விதைகளை நட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடா்ச்சியாக வனத் துறை மூலம் பனை விதைகள் நடவும் செய்யும் பணி மண்ணச்சநல்லூா் வட்டம் கொணலை கிராமத்தில் உள்ள ஏரியில் புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு மாவட்ட வன அலுவலா் சீ. கிருத்திகா தலைமை வகித்தாா். இதில் உதவி வனப்பாதுகாவலா் ஐ. காதா்பாட்ஷா, வனச்சரக அலுவலா்கள் ஜெ. ரவி, தீ. கிருஷ்ணன், தோட்டக்கலை கல்லூரி பேராசிரியா் குமரன், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
அப்போது மாவட்ட வன அலுவலா், மாணவா்களிடம் பனை மரத்தின் சிறப்புகள், பயன்கள், நடவு செய்வதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
