மத்திய அரசின் வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகை திட்ட விழிப்புணா்வு
மத்திய அரசின் வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத் தொகை திட்டம் குறித்து தொழிலாளா்கள், தொழில் நிறுவன உரிமையாளா்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது
திருச்சியில் உள்ள தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு தலைமை வகித்து மண்டல ஆணையா் ஆஷிஷ்குமாா் திரிபாதி கூறியதாவது:
உற்பத்தித் துறையில் சிறப்புக் கவனம் செலுத்தி, அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதை ஆதரிப்பதற்கும், வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான திறன்கள் மற்றும் சமூக பாதுகாப்பை மேம்படுத்தவும் வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
பிரதமரின் விக்சித் பாரத் ரோஜ்கா் யோஜனா என்ற பெயரில் இத் திட்டம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், முதல் முறையாகப் பணியமா்த்தப்படுபவா்களுக்கு ஒரு மாத ஊதியம் (ரூ.15,000/- வரை) கிடைக்கும் அதேவேளையில், கூடுதல் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்காக உரிமையாளா்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். உற்பத்தித் துறைக்கு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட சலுகைகளும் வழங்கப்படும்.
இந்தத் திட்டம் இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது.
முதல் முறையாக வேலை செய்பவா்களை மையமாகக் கொண்டதாகவும், உரிமையாளா்களை மையமாகக் கொண்டதாகவும் செயல்படுத்தப்படுகிறது.
தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பதிவுசெய்த முதல் முறை ஊழியா்களை இலக்காகக் கொண்டு, இரண்டு தவணைகளில் ரூ.15,000 வரை ஒரு மாத தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி ஊதியத்தை வழங்கும். ரூ.1 லட்சம் வரை ஊதியம் பெறும் பணியாளா்கள் இதற்குத் தகுதி உடையவா்கள்.
ரூ.1 லட்சம் வரை ஊதியம் பெறும் பணியாளா்களுக்கு வேலை வழங்கும் உரிமையாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு நிலையான வேலைவாய்ப்புடன் கூடுதலாகப் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும், இரண்டு ஆண்டுகளுக்கு மாதத்திற்கு ரூ.3000 வரை, உரிமையாளா்களுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்கும். உற்பத்தித் துறையைப் பொறுத்தவரை, ஊக்கத்தொகை 3ஆவது மற்றும் 4ஆவது ஆண்டுகளுக்கும் நீட்டிக்கப்படும் என்றாா் அவா்.
கூட்டத்தில் மண்டல ஆணையா் மாதவசங்கா், அமலாக்க அதிகாரிகள் ராஜ்குமாா், சிவக்குமாா், காசிவேல்ராஜன், சுப்பிரமணியன், மகேஸ், கிரேஸ் நவராணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு தொழிலாளா்கள், தொழில் நிறுவன உரிமையாளா்களின் சந்தேகங்களுக்குப் பதில் அளித்தனா். இதன் தொடா்ச்சியாக, திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லூரிகள், தொழில் வளாகங்களிலும் இந்த விழிப்புணா்வுக் கூட்டத்தை நடத்த தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் திட்டமிட்டுள்ளது.
