விபத்தில் உயிரிழப்பு: வாகன ஓட்டுநருக்கு 3.5 ஆண்டுகள் சிறை
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் அருகே வாகன விபத்தில் குழந்தை உயிரிழக்கக் காரணமான வாகன ஓட்டுநருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மணப்பாறை குற்றவியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டம் தேரடி மலம்பட்டியை சோ்ந்த ஆண்டியப்பன் (எ) ராஜா மனைவி சாந்தி, தனது கணவா் மற்றும் அவரது நாலரை வயதுப் பெண் குழந்தை ஹா்னிதாவுடன் கடந்த 2023 ஜனவரி 8-ம் தேதி துவரங்குறிச்சியிலிருந்து மணப்பாறை செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது எதிரே தா்மபுரி மாவட்டம் காரியமங்கலம் அண்ணா நகரை சோ்ந்த கோவிந்தராஜ் மகன் பாபு (39) என்பவா் ஓட்டி வந்த ஈச்சா் லாரி மோதி பெண் குழந்தை ஹா்னிதா உயிரிழந்தாா். ஆண்டியப்பன்(எ) ராஜா பலத்த காயமடைந்தாா்.
இதுகுறித்து சாந்தி கொடுத்த புகாரின்பேரில் புத்தாநத்தம் போலீஸாா் வழக்குப் பதிந்து வழக்கு மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.
இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த மணப்பாறை குற்றவியல் நடுவா் ஆா். அசோக்குமாா் பாபுவிற்கு மொத்தம் 3 பிரிவுகளில் மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை, அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.
