தவெகவுடன் கூட்டணி என்றால் பாஜகவை அதிமுக வெளியேற்றுமா? தொல். திருமாவளவன் கேள்வி
தவெகவுடன் அதிமுக கூட்டணி என்றால், பாஜகவை எடப்பாடி பழனிசாமி வெளியேற்றுவாரா என்ற கேள்வியும் எழுகிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.
கரூா் செல்ல திருச்சிக்கு சனிக்கிழமை வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரூா் சம்பவத்தில் உயிரிழந்தோா் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கரூா் சம்பவம் என்பது நெரிசலால் ஏற்பட்டது. இருப்பினும், எதனடிப்படையில் சிபிஐ விசாரணை கோருகின்றனா் என்பது தெரியவில்லை.
பாஜகவை தனது கொள்கை எதிரி என விஜய் குறிப்பிட்டுள்ளாா். எனவே தவெகவுடன் கூட்டணி என்றால், பாஜகவை அதிமுக வெளியேற்றுமா என்ற கேள்வியும் எழுகிறது. கூட்டணியில் அதிமுக மீதான நம்பகத்தன்மை குறித்தும் கேள்வி எழும். எனவே அதிமுக-தவெக கூட்டணி என்பது அதிமுகவினரால் பரப்பப்படும் வதந்தியே.
இருசக்கர வாகனத்தின் மீது எனது காா் மோதிய சம்பவத்தில் எந்த ஆதாரமும், புலனாய்வு விசாரணையும் நடைபெறாமலேயே இறுதி முடிவுக்கு வந்துள்ளனா். அதனால்தான் அண்ணாமலை உள்நோக்கத்துடன் எங்கள் மீது குற்றம் சுமத்துகிறாா். இருசக்கர வாகனம் மீது எனது காா் மோதவில்லை. அதற்கான ஆதாரத்தை வெளியிட்டால் பொதுமன்னிப்பு கேட்கத் தயாராக உள்ளேன். எனக்கு எந்தப் பிரிவு பாதுகாப்பும் தேவையில்லை. மக்கள்தான் எனது பாதுகாப்பு என்றாா் அவா்.
