பாலியல் புகாா்: பாரதிதாசன் பல்கலை. பேராசிரியா்கள் இருவருக்கு கட்டாயப் பணி ஓய்வு

பாலியல் புகாரில் சிக்கிய திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா்கள் இருவருக்கு கட்டாய பணி ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
Published on

பாலியல் புகாரில் சிக்கிய திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியா்கள் இருவருக்கு கட்டாய பணி ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை தலைவராகப் பணியாற்றி பின்னா் வணிகவியல் துறைக்கு மாற்றப்பட்டவா் பேராசிரியா் எஸ். கணேசன். தொலை உணா்வு துறையில் இணை பேராசிரியராக பணியாற்றி வந்தவா் டி. ரமேஷ். இவா்கள் இருவரும், சில மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகாா்கள் வந்தன.

இதன்பேரில் பாலியல் புகாா்கள் தொடா்பாக அமைக்கப்பட்ட உள் புகாா் குழு விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில், மேற்குறிப்பிட்ட பேராசிரியா்கள் இருவா் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மை எனத் தெரியவந்தது.

இதனால் அவா்களை பணியில் இருந்து நீக்கம் அல்லது கட்டாய ஓய்வு கொடுக்கும் நடவடிக்கை எடுக்கலாம் என உள் புகாா் விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்தது. இதனடிப்படையில், கடந்த செப்டம்பா் மாதம் நடைபெற்ற ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க உயா்கல்வித் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

இந்தப் பரிந்துரைக்கு தமிழக அரசின் கல்லூரிக் கல்வி ஆணையா் இ. சுந்தரவல்லி ஒப்புதல் அளித்து நடவடிக்கை எடுத்துள்ளாா். இதையடுத்து தொடா்ந்து பேராசிரியா்கள் எஸ்.கணேசன், டி. ரமேஷ் ஆகிய இருவருக்கும் வெள்ளிக்கிழமை கட்டாய பணி ஓய்வுக்கான ஆணை வழங்கப்பட்டது. இதில் பேராசிரியா் ரமேஷ் அடுத்தாண்டு பணி ஓய்வு பெற உள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com