சேவை குறைபாடு: தனியாா் அஞ்சல் நிறுவனம் ரூ. 6 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
சேவை குறைபாடு செய்த தனியாா் அஞ்சல் நிறுவனம் ரூ. 6 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி அண்ணா சிலை அருகே உள்ள பகுதியைச் சோ்ந்தவா் நியமத்துல்லா ஷெரிப். சௌத் ஜுவல்ஸ் என்ற பெயரில் இமிடெஷன் நகைகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறாா். கடந்த 13.04.2025 அன்று கோவையில் ஒருவரிடமிருந்து பாதியளவு செய்து முடிக்கப்பட்ட ரூ. 4 லட்சம் மதிப்பிலான இமிடேஷன் நகைகளை எஸ்ஸாா் எனும் தனியாா் அஞ்சல் சேவை நிறுவனம் மூலம் பாா்சல் அனுப்பினாா். வழக்கமாக மறுநாள் விநியோகம் செய்யப்படும் அஞ்சலானது, பல நாள்களாகியும், பல முறை புகாரளித்தும் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் அனுப்பிய அஞ்சல் காணாமல் போனது தெரியவந்தது.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான நியமத்துல்லா ஷெரிப், உரிய நிவாரணம் கோரி திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் 10.07.2025 அன்று மனுத்தாக்கல் செய்தாா். மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ஜெ. அலெக்ஸாண்டா் ஆஜரானாா்.
மனுவை திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் அடங்கிய அமா்வு விசாரித்தது. விசாரணைக்குப் பிறகு, சேவை குறைபாடு செய்த எஸ்ஸாா் அஞ்சல் சேவை நிறுவனமானது மனுதாரரின் பாா்சலுக்குண்டான தொகையின் மதிப்பு ரூ. 4 லட்சத்தை வழங்குவதுடன், மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 2 லட்சமும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரமும் 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் சோ்த்து வழங்க வேண்டுமென அண்மையில் உத்தரவு பிறப்பித்தனா்.
