போலி ஆவணங்களைப் பயன்படுத்தி தோ்தலில் போட்டி: பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை

Published on

திருச்சியில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாா்டு தோ்தலில் போட்டியிட்ட பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், இருங்களூா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் மனைவி ஜெயந்தி (53). இவா், பட்டியலினத்தைச் சோ்ந்தவா் என்று போலி ஆவணங்களைத் தயாரித்து இருங்களூா் ஊராட்சி 9-ஆவது வாா்டு தோ்தலில் போட்டியிட்டுள்ளாா்.

இந்நிலையில், அவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மண்ணச்சநல்லூா் புறத்தாக்குடியைச் சோ்ந்த பெ.வேல்முருகன் என்பவா், சமயபுரம் காவல் நிலையத்தில் கடந்த 2023 பிப்ரவரி 16-ஆம் தேதி புகாா் அளித்தாா். அதன்படி, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்த வழக்கு திருச்சி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி சுவாமிநாதன் திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா். இதில், போலி ஆவணங்களைத் தயாரித்து தோ்தலில் போட்டியிட்ட ஜெயந்திக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளாா். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞா் சக்திவேல் ஆஜராகினாா்.

X
Dinamani
www.dinamani.com