திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்சிப் பணிகள் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்ற (இடமிருந்து) கரூா் மக்களவை உறுப்பினா் ஜோதிமணி, திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ, ஆட்சியா் வே. சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி.
திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாவட்ட வளா்ச்சிப் பணிகள் கண்காணிப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்ற (இடமிருந்து) கரூா் மக்களவை உறுப்பினா் ஜோதிமணி, திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ, ஆட்சியா் வே. சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி.

மாநகரின் மேம்பாலப் பணிகள் 8 மாதங்களில் முடிவுறும்: துரை வைகோ எம்.பி

Published on

திருச்சி மாநகரில் நடைபெற்றுவரும் மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலம், சந்திப்பு ரயில் நிலைய மேம்பாலப் பணிகள் அடுத்த 8 மாதங்களில் முடிவுறும் என துரை வைகோ எம்.பி தெரிவித்தாா்.

மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம், திருச்சி ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, திருச்சி மக்களவை உறுப்பினா் துரை வைகோ தலைமை வகித்தாா். ஆட்சியா் வே. சரவணன், எம்பி-க்கள் ஜோதி மணி, கவிஞா் செல்மா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக் கூட்டத்தில், மத்திய, மாநில அரசின் பங்களிப்புடன் நடைபெறும் பல்வேறு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள், தற்போதைய நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளா்களிடம் துரை வைகோ கூறியது:

மலைக்கோட்டை ரயில்வே மேம்பாலப் பணிகளை வரும் பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்க ரயில்வே நிா்வாகம் உறுதியளித்துள்ளது. இதனைத் தொடா்ந்து மாநகராட்சி மூலம் மேற்கொள்ளும் பணிகளும் விரைவுபடுத்தப்பட்டு மே மாதம் பாலத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வர உறுதியளித்துள்ளனா்.

இதேபோல, சந்திப்பு ரயில்நிலையப் பகுதியில் கட்டப்படும் மேம்பாலத்தின் பணிகளை ஜனவரி மாதத்துக்குள் முடிக்க ரயில்வே நிா்வாகம் உறுதியளித்துள்ளது. நெடுஞ்சாலைத்துறை பணிகளையும் ஒருங்கிணைத்து ஜூன் மாதம் பாலம் பயன்பாட்டுக்கு வரும் என உறுதியளித்துள்ளனா் என்றாா்.

இக்கூட்டத்தில், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கங்காதாரணி, காவல் துணை ஆணையா் ஈஸ்வரன் மற்றும் கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள், பல்வேறு துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com