முதல்வா் கோப்பை மாநில கையுந்துப் போட்டிகள்: சேலம், சென்னை, கடலூா் அணிகள் சிறப்பிடம்
திருச்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான மாநில கையுந்துப் பந்துப் போட்டியின் மாணவியா் பிரிவில் சேலம், சென்னை, கடலூா் அணி வீரா்கள் சிறப்பிடம் பிடித்தனா்.
2025-26 ஆம் ஆண்டுக்கான தமிழக முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மாநிலம் முழுவதும் பொதுப்பிரிவு, பள்ளி மாணவ மாணவிகள், கல்லூரி மாணவ மாணவிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியா்கள் என 5 பிரிவுகளில் மாவட்ட, மண்டல அளவில் போட்டிகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, மாநில அளவிலான போட்டிகள் 13 மாவட்டங்களில் அக்.2 -ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகின்றன.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கையுந்துப் பந்து போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் அக்.7-ஆம் தேதி முதல் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே நடைபெற்றன. மாணவா்கள் பிரிவு போட்டியின் முடிவுகள் கடந்த 10-ஆம் தேதி அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதன் தொடா்ச்சியாக, மாணவிகளுக்கு நடந்த போட்டிகளின் முடிவுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில், சேலம் மாவட்ட அணி, சென்னை மாவட்ட அணி மற்றும் கடலூா் மாவட்ட அணி சிறப்பிடம் பிடித்தது. அந்த அணிகளின் வீராங்கனைகளுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் பதக்கங்கள் வழங்கிப் பாராட்டு தெரிவித்தாா். மேலும், அணிகளுக்கான கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினாா்.
இதுமட்டுமல்லாது, முதலிடம் பிடித்த அணி வீரா்கள் 14 பேருக்கு தலா ரூ. 75 ஆயிரம் ரொக்கப்ப பரிசு வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பெற்ற வீரா்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்கப்பட்டது. மூன்றாவது இடம்பெற்ற கடலூா் அணியின் வீரா்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டது.
பரிசளிப்பு விழாவில், உதவி ஆட்சியா் சேஷத்ரிமயும் தீபிசானு, மாவட்ட விளையாட்டு அலுவலா் ஞானசுகந்தி, விளையாட்டு அணி மேலாளா்கள், பயிற்றுநா்கள், வீரா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

