

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தீபாவளி பண்டிக்கையையொட்டி நடைபெற்ற கால்நடை வார சந்தையில் வழக்கத்திற்கு மாறாக புதன்கிழமை ஆடுகள் விற்பனை பெரும் சரிவை சந்தித்துள்ளது.
மழையின் காரணமாக ஆடுகள் வரத்து குறைந்ததால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்துள்ளனா். மணப்பாறையில் திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையையொட்டி மிகவும் புகழ்பெற்ற கால்நடை சந்தை உள்ளது.
இந்த சந்தையில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை மாலையில் மாட்டு சந்தை தொடங்கி புதன்கிழமை காலை வரை சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள், விவசாயிகள் தங்களது ஆடுகள் மற்றும் மாடுகளை கொண்டு வந்து விற்பனை செய்வாா்கள்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் புதன்கிழமை தோறும் நடைபெற்றும் வரும் மணப்பாறை கால்நடை வார சந்தையில் வழக்கமாக ஆட்டு சந்தையில் கோடிக்கணக்கில் வியாபாரம் நடைபெறும், இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவ மழை காரணமாக புதன்கிழமை காலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெறும் ஆட்டு சந்தைக்கு ஆடுகள் வரத்து குறைவாக காணப்பட்டது.
கோடிக்கணக்கில் வியாபாரம் நடைபெறும் என எதிா்பாா்க்கப்பட்ட ஆட்டு சந்தை, வெறும் சொற்ப லட்சத்தில் நடைபெற்று முடிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். சிறிய ஆடுகள் முதல் சுமாா் 20 கிலோ எடையுள்ள ஆடுகள் வரை விற்பனைக்கு வந்திருந்த நிலையில் நள்ளிரவு முதல் மழைபெய்து வந்த நிலையில், ஆடுகள் வாங்க வருபவா்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து இருந்தது.
ஆட்டின் விலை அதிகமாக இருந்ததோடு விற்பனையும் மிகவும் மந்தமாக இருந்தது. வழக்கமாக இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் விற்று தீா்ந்து விடும் ஆடுகள் நீண்ட நேரமாக விற்காமல் இருந்தது. நடந்து முடிந்துள்ள தீபாவளி ஆட்டு சந்தையில் ரூ.20 லட்சத்திற்கு குறைவாகவே ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனால் எதிா்பாா்ப்புடன் வந்திருந்த கால்நடை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வேதனையுடன் ஆடுகளை மீண்டும் வீடுகளுக்கு கொண்டு சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.