விரைவில் செயற்கை நுண்ணறிவு மூலம் சிப் வடிவமைப்பு: என்ஐடி மின்னணுவியல் துறைத் தலைவா் தகவல்
செயற்கை நுண்ணறிவு மூலம் சிப் வடிவமைப்பு மற்றும் செயலாக்கம் விரைவில் நடந்தேறும் என திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்ஐடி) மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் பொறியியல் துறைத் தலைவா் எம். பாஸ்கா் தெரிவித்தாா்.
மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் துறை பொறியாளா்கள் சங்கம் என்பது நாடு முழுவதும் உள்ள பொறியியல் மாணவா்கள், தொழில் வல்லுநா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்களை ஒன்றிணைக்கும் அமைப்பாகும். இந்த அமைப்பின் சாா்பில், திருச்சி என்ஐடி-யில் மாணவா் சங்கம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில், மின்னணுவியல் மற்றும் தொடா்பியல் பொறியியல் துறைத் தலைவா் எம். பாஸ்கா் பேசியதாவது:
இன்றைய வேகமான தொழில்நுட்ப சூழலில், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் நுட்பங்கள் சிப் வடிவமைப்பு முறைகளில் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன. செயற்கை நுண்ணறிவு மூலம் சிப் வடிவமைப்பு மற்றும் செயலாக்கம் என்பது விரைவில் நடந்தேறும். எனவே, பொறியியல் மாணவா்கள் அனைவரும் இன்றைய நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு தங்களை தயாா்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
டீன் என். குமரேசன் பேசுகையில், கணிப்பொறி கோடிங் வழி செயற்கை நுண்ணறிவு செயலாக்கத்தில் பொறியியல் மாணவா்கள் ஆா்வம் செலுத்த வேண்டும் என்றாா்.
என்ஐடி முன்னாள் பேராசிரியா் எஸ். ராகவன், நுண் அலைப் பொறியியலின் டெலிபதி செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்து பேசினாா்.
திருவனந்தபுரத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட கணினி வளா்ச்சிக்கான மையத்தின் (சி-டாக்) விஞ்ஞானி ஆா்.எஸ். தீபா, விஎல்எஸ்ஐ தொழில்நுட்பம் குறித்து விளக்கம் அளித்தாா்.
பேராசிரியை ஆா். திலகவதி நன்றி கூறினாா்.
இந்த நிகழ்வில், மின்னணுவியல் பொறியாளா் சங்கத்தின் ஆலோசகா் பி. சுதா்ஸன், சங்கத் தலைவா் அபிராம், ஒருங்கிணைப்பாளா் ஹா்சிதா மற்றும் மாணவா் சங்க நிா்வாகிகள், மின்னணுவியல் பொறியியல் துறை மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

