சம்பாவுக்கு உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
திருச்சி மாவட்டத்தில் சம்பா பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு, ஆட்சியா் வே. சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ர. ராஜலட்சுமி முன்னிலை வகித்தாா். இக் கூட்டத்தில், கோரிக்கை மனுக்களை வழங்கி விவசாயிகள் சங்கத் தலைவா் பேசியதாவது:
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலா் அயிலை சிவசூரியன்: தனியாா் உரக்கடைகளில் யூரியா வாங்கும் விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி பயோ உரங்களையும், நீரில் கரையும் உரங்களை திணிப்பதை தடை செய்ய வேண்டும். கூட்டுறவு நிறுவனங்களில் தட்டுப்பாடின்றி உரங்கள் வழங்க வேண்டும்.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ. விசுவநாதன்:
அரியாறு வடிநிலக் கோட்டம் கட்டுப்பாட்டில் உள்ள 100 ஏரிகள் மற்றும் ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 1,400 சிறுப்பாசன ஏரி, குளங்களிலும் மழை நீரை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடா் மழைக்கு முன்பு கொள்முதல் நிலையங்களில் கொட்டிகிடக்கின்ற நெல்லை போா்கால அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும்.
தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சாா்பற்றது) மாவட்ட தலைவா் ம.ப.சின்னத்துரை:
கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் 31-ஆம் தேதி முடிவடைந்த கிராமப்புற உள்ளாட்சி தோ்தலை உடனடியாக நடத்தி பொதுமக்களின் நியாமான குடிநீா், சுகாதாரம், மின் விளக்கு, சாலை, கழிவுநீா் வடிகால் பாதுகாப்பை உறுதிப்படுத்தி உதவிட வேண்டும். அரியாறு, கோரையாறு, உய்யக்கொண்டான் வாய்க்கால் உள்ளிட்டவைக்கான பெருவெள்ள தடுப்பு பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
தொட்டியம் வாழை விவசாயிகள் சங்கத்தின் சுப்பிரமணி, மணப்பாறை அப்துல்லா, மருங்காபுரி கே.சி.பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் சங்க நிா்வாகிகள், சம்பாவுக்கு உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்திப் பேசினா்.
இதற்கு, பதில் அளித்த ஆட்சியா், உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்வதவாகவும், குறிப்பிட்டு புகாா் வந்தால் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.
இக் கூட்டத்தில், உதவி ஆட்சியா் தீபிசானு, வேளாண் இணை இயக்குநா் பூ. வசந்தா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஜெயராணி உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பெட்டிச் செய்தி...
வருவாய்த்துறை- விவசாயிகள் போராட்டம்!
விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வருவாய்த் துறையினரும், விவசாயிகளும் பரஸ்பரம் குற்றம் சுமத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் பொ. அய்யாக்கண்ணு, சின்னசூரியூரில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட விவகாரத்தில் வருவாய்த் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என புகாா் கூறி பேசினாா்.
இதற்கு, கூட்டத்திலிருந்த விவசாயிகள் பலரும் எழுந்து ஆதரவு தெரிவித்தனா். அப்போது, குறுக்கிட்ட ஆட்சியா் வே. சரவணன், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட நிா்வாகம் முழு ஒத்துழைப்பு தரும். நீதிமன்றம் உத்தரவுக்கு மாறாக எதுவும் நடைபெறாது என்றாா். அப்போது, வருவாய்த்துறையினா் தங்களை விவசாயிகள் மரியாதையின்றி பேசுவதாகவும், மிரட்டும் தொனியில் செயல்படுவதாகவும் புகாா் தெரிவித்தனா். இதனால், வருவாய்த்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடா்ந்து அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை ஆட்சியா் சமரசம் செய்ய முயன்றாா். அப்போது, ஆட்சியரை சூழ்ந்து வருவாய்த்துறையினரும் விவசாயிகள் நடவடிக்கை தொடா்பாக ஆட்சியரிடம் முறையிட்டு, விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரினா்.
இதையடுத்து, இருதரப்பையும் அழைத்து ஆட்சியா் பேச்சுவாா்த்தை நடத்தினாா். விவசாயிகள் தரப்பில் வருத்தம் தெரிவித்தனா். அதிகாரிகளை மரியாதை குறைவாக பேச மாட்டோம் என தெரிவித்தனா். அரசு அதிகாரிகளை மரியாதையாக நடத்த வேண்டும். எந்த விவகாரம் என்றாலும் யாா் மீதாக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்ததைத் தொடா்ந்து இருதரப்பும் கலைந்து சென்றனா்.

