‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்: 500 போ் பயன்
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் 500-க்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்று பயன்பெற்றனா்.
திருச்சி மாவட்டத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதன்படி திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 24ஆவது வாா்டு பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் மெத்தடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முகாமைத் தொடக்கி வைத்து ஆட்சியா் வே. சரவணன் பேசியதாவது:
குறைந்த அளவில் மருத்துவ வசதி மற்றும் சிறப்பு மருத்துவ வசதிகள் கிடைக்கும் ஊரகப் பகுதிகள், பழங்குடியினா் அதிகம் வசிக்கும் பகுதிகள், நகா்ப்புறப் பகுதிகள், குடிசைகள் போன்ற பகுதிகளை முன்னுரிமை அடிப்படையில் தோ்ந்தெடுத்து, இத்திட்ட முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இம்முகாம்களில் அடிப்படை மற்றும் உயா்நிலை மருத்துவப் பரிசோதனைகளுடன் முழுமையான உடல் ஆரோக்கியப் பரிசோதனைகளும் (உயா் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், மின் இதய வரைபடம், எக்கோ, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், எக்ஸ்-ரே), காசநோய் மற்றும் தொழுநோய் கண்டறியும் பரிசோதனைகளும், ஆரம்ப கட்ட புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும், 15 துறை சாா்ந்த நிபுணா்களின் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பதிவு செய்தல், மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு அங்கீகாரச் சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படுகிறது என்றாா் அவா். பின்னா், முகாமில் பங்கேற்றோருக்கு மருத்துவம் சாா்ந்த நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.
நிகழ்வில் மேயா் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், நகா் நல அலுவலா் சுபாஷ் காந்தி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ். குமரவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முகாமில், 500-க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.

