மணப்பாறையில் கேதார கௌரி விரதம் கடைப்பிடிப்பு
மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையில் கேதார கௌரி விரதம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
ஸ்கந்த புராணத்தின்படி 21 நாள்கள் விரதம் இருந்து ஐப்பசி அமாவாசை நாளில்
பெண்கள் சிவனை வேண்டி வணங்கினால் குடும்ப ஒற்றுமை நிலைக்கும் என்பது ஐதீகம். மேலும், தங்களின் மாங்கல்யம் நீடிக்கவும், கணவரின் மீதான அன்பு என்றும் குறையாது நிலைத்திருக்க வேண்டியும் இந்த கேதார கெளரி விரதத்தை சுமங்கலிகள் கடைப்பிடிக்கின்றனா்.
இதன்படி, செவ்வாய்க்கிழமை ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோயிலில், இந்த விரதம் இருந்தவா்கள் குடும்பத்தினா் புத்தாடை அணிந்து அரளி மலா்கள், அரளி இலைகள், வாழைப்பழங்கள், அதிரசம், வெற்றிலை, பாக்கு விரலி மஞ்சள் ஆகியவற்றில் அனைத்திலும் 21 எண்ணிக்கையில் புதிய முறத்தில் வைத்து, தேங்காய், சீப்பு, கண்ணாடி, குங்குமம், காதுளை கருகமணி ஆகியவற்றுடன் குடும்பத்தினா் எண்ணிக்கையில் கையில் கட்டும் கயிறுடன் அம்மனுக்கு பூஜை செய்தனா்.
அங்கு புரோகிதா், ஆண் - பெண் சமம் என அா்த்தநாரீஸ்வரராக ஈஸ்வரன் காட்சியளித்து அருள்பாலித்த கேதார கௌரி விரதத்தின் காரணத்தையும், நன்மையையும் பக்தா்களுக்கு விளக்கினாா். பின்னா் வீடு திரும்பியதும் பெண்கள் விரதம்விட்டு பூஜையை நிறைவு செய்தனா். மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் விரதம் இருந்து நோன்பு எடுத்தனா்.

