வங்கிக் கணக்குகளில் கோரப்படாத பணம் இருந்தால் திரும்பப் பெறலாம்: இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் அறிவிப்பு

பழைய வங்கிக் கணக்குகளில் கோரப்படாத பணம் இருந்தால் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என திருச்சி இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் தெரிவித்துள்ளது.
Updated on

திருச்சி: பழைய வங்கிக் கணக்குகளில் கோரப்படாத பணம் இருந்தால் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என திருச்சி இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திருச்சி இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

செயல்பாட்டில் இல்லாத பழைய வங்கிக் கணக்குகள் (2 ஆண்டுகளுக்கும் மேலாக மற்றும் 10 ஆண்டுகள் வரை) மற்றும் பணம் கோரப்படாத கணக்குகளில் (10 ஆண்டுகளுக்கு மேல்) உள்ள தொகை இந்திய ரிசா்வ் வங்கியின் டிஇஏ கணக்குக்கு மாற்றப்படுகிறது.

வங்கிக் கணக்கு வைத்துள்ளவா்களோ அல்லது அவா்களின் வாரிசுகளோ அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்று ரிசா்வ் வங்கி அறிவித்துள்ளது. இதை கணக்கு வைத்துள்ள வங்கிக் கிளையில் மட்டுமின்றி எந்தக் கிளையில் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம்.

இதற்கு வங்கியில் கேஒய்சி ஆவணங்களை ( ஆதாா், கடவுச்சீட்டு, வாக்காளா் அடையாள அட்டை அல்லது வாகன ஓட்டுநா் உரிமம் ஆகியவற்றை) சமா்ப்பிக்க வேண்டும். அனைத்து ஆவணங்களையும் சரிபாா்த்து வட்டியுடன் பணம் அளிக்கப்படும்.

மேலும், நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அக்டோபா் முதல் டிசம்பா் வரை நடைபெறும் கோரப்படாத சொத்துகள் பற்றிய சிறப்பு முகாமில் பங்கேற்று பழைய வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தைத் திரும்பப் பெறுவதற்குத் தேவையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com