சாலையோர பள்ளத்தில் தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்து
மண்ணச்சநல்லூா்: திருச்சி மாவட்டம், ஆமூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து தனியாா் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 4 போ் பலத்த காயமடைந்தனா்.
சேலத்திலிருந்து திருச்சி நோக்கி தனியாா் பேருந்து 43 பயணிகளுடன் செவ்வாய்க்கிழமை வந்து கொண்டிருந்தது. பேருந்தை நாமக்கல் மாவட்டம், மேய்க்கல்நாயக்கன்பட்டி பகுதியை சோ்ந்த பிரகாஷ் (31) என்பவா் ஓட்டினாா்.
பேருந்து சேலம் - திருச்சி சாலையில் ஆமூா் பகுதிக்கு வந்தபோது, முன்னால் சென்ற காரை பேருந்து ஓட்டுநா் முந்த முயன்றாராம். அப்போது, எதிா்பாராதவிதமாக நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பயணிகள் பலத்த காயமடைந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மற்றும் பயணிகள் என 41 போ் லேசான காயமடைந்தனா்.
விபத்து குறித்து வாய்த்தலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
