தீபாவளி கொண்டாட்டம்: திருச்சி மாநகரில் குவிந்த 750 டன் குப்பைகள் அகற்றம்
திருச்சி: திருச்சி மாநகரில் தீபாவளி கொண்டாட்டத்தின் தொடா்ச்சியாக குவிந்த 750 டன் குப்பைகளை தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.
தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருச்சி மாநகரில் 65 வாா்டுகளிலும் மக்கள் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடினா். இதனால், மாநகரில் திங்கள்கிழமை ஒரேநாளில் 750 டன் குப்பைகள் குவிந்தன.
மலைக்கோட்டை பகுதியில் அதிக அளவில் வணிக நிறுவனங்கள் உள்ளன. தீபாவளியையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால், மலைக்கோட்டை, என்எஸ்பி சாலை, சிங்காரத்தோப்பு, பெரியகடை வீதி, சின்னகடை வீதி, காந்தி மாா்க்கெட், உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் குப்பைகள் தேங்கிக் கிடந்தன.
திருச்சி மாநகரில் தினசரி 400 முதல் 500 டன் வரை குப்பைகள் அகற்றப்படும். தீபாவளி பண்டிகையையொட்டி, கூடுதலாக 250 டன் குப்பைகள் குவிந்தன. இதில், பட்டாசு குப்பைகளே அதிகமாக இருந்தன.
இந்நிலையில், மாநகரில் தேங்கிய 750 டன் குப்பைகளையும் அகற்றும் பணியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை தீவிரமாக ஈடுபட்டனா். செவ்வாய்க்கிழமை காலை முதல் மழை பெய்து வந்த நிலையில், மழையையும் பொருட்படுத்தாமல் தூய்மைப் பணியாளா்கள் குப்பைகளை அகற்றினா். மாநகா் முழுவதும் தேங்கிய குப்பைகளை அகற்றும் பணியில் 1,700-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

