அரசுக் கல்லூரியில் ஆவணங்கள் எரிப்பு: போலீஸாா் விசாரணை
திருச்சி: துவாக்குடி அரசுக் கல்லூரியில் ஆவணங்களை எரித்த மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
திருச்சி மாவட்டம், துவாக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தீபாவளியை முன்னிட்டு கடந்த 18-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும், மழையால் புதன்கிழமை கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
கல்லூரியை மீண்டும் வியாழக்கிழமை திறக்கவுள்ள நிலையில் கல்லூரியை சுத்தப்படுத்த தூய்மைப் பணியாளா் புதன்கிழமை கல்லூரிக்குச் சென்றபோது, வணிகவியல் துறைத் தலைவா் அலுவலகம் மற்றும் கணினி ஆய்வக அறையின் பூட்டை மா்ம நபா்கள் உடைத்து, அங்கிருந்த ஆவணங்கள் எரித்து இன்வொ்ட்டரை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவா் கல்லூரி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்தாா்.
புகாரின்பேரில் துவாக்குடி போலீஸாா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனா். மேலும், கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டனா்.
