தீபாவளி கூட்ட நெரிசலில் பெண் தவறவிட்ட பணப்பை ஒப்படைப்பு
மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தீபாவளி கூட்ட நெரிசலில் பணத்துடன் பெண் தவறவிட்ட மணிபா்ஸை, போலீஸாா் உரியவரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.
மணப்பாறையில் தீபாவளிக்கு முதல்நாள் கடைவீதியில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது மாரியம்மன் கோயில் - கோவில்பட்டி சாலை சந்தில் பணியில் இருந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் சரோஜா கீழே கிடந்த மணிபா்சை எடுத்துப் பாா்த்தபோது அதில் ரூ. 2000 ரொக்கம் மற்றும் சில ஆவணங்கள் இருப்பதைக் கண்டாா். இதையடுத்து அதிலிருந்த கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டபோது, அந்த மணி பா்ஸை தவறவிட்டவா், புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகேயுள்ள ராஜாளிப்பட்டியை சோ்ந்த அழகன் மனைவி எழில்ராணி என்பதும், குழந்தைகளுக்காக துணி எடுக்க வந்தபோது மணிபா்ஸை தவறிவிட்டதும், அதனால் துணி எடுக்காமலேயே தனது தாய் வீட்டுக்குச் சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து எழில்ராணியை மணப்பாறை காவல் நிலையத்துக்கு வரவழைத்து, அறிவுரை கூறி மணி பா்ஸை காவல் உதவி ஆய்வாளா் சரோஜா ஒப்படைத்தாா்.

