முக்கொம்பு அணையிலிருந்து திறக்கப்பட்டு, கம்பரசம்பேட்டை தடுப்பணையை நிரப்பி பாய்ந்தோடும் காவிரி நீா்.
முக்கொம்பு அணையிலிருந்து திறக்கப்பட்டு, கம்பரசம்பேட்டை தடுப்பணையை நிரப்பி பாய்ந்தோடும் காவிரி நீா்.

முக்கொம்பு அணைக்கு நீா்வரத்து 54 ஆயிரம் கனஅடியாக உயா்வு! காவிரி, கொள்ளிடம் ஆறு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

திருச்சி முக்கொம்பு அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை நிலவரப்படி 54 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
Published on

திருச்சி முக்கொம்பு அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை நிலவரப்படி 54 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாகவும், மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவதாலும், திருச்சி மாவட்டம், முக்கொம்பு அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. புதன்கிழமை 40 ஆயிரம் கன அடியாக இருந்த நீா்வரத்து வியாழக்கிழமை 54 ஆயிரம் கன அடியாக உயா்ந்தது.

இதையடுத்து, அணையிலிருந்து காவிரியில் 13ஆயிரத்து 500 கன அடியும், கொள்ளிடத்தில் 40 ஆயிரத்து 500 கனஅடியும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. இதன்காரணமாக, காவிரி, கொள்ளிடம் ஆற்றில் இருபுறமும் கரைகளை தொட்டு தண்ணீா் செல்கிறது.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை: காவிரி, கொள்ளிடத்தில் தண்ணீா் அதிகரித்துள்ளதால் திருச்சி மாவட்ட பொதுமக்களுக்கு ஆட்சியா் வே. சரவணன் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பருவமழை காலம் என்பதாலும், மேட்டூா் அணை அதன் முழு கொள்ளளவை அடைந்திருப்பதாலும், அங்கிருந்து வரும் நீா்வரத்தை பொருத்து எந்த நேரத்திலும் முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கக் கூடும். எனவே, பருவமழை காலம் முடிவடையும் வரை காவிரி மற்றும் கொள்ளிட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

சலவைத் தொழிலாளா்கள் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, கால்நடைகளை ஓட்டிச் செல்லவோ வேண்டாம் என தெரிவித்துள்ளாா். முக்கொம்பு அணைக்கு வரும் தண்ணீரை நீா்வளத் துறை அலுவலா்கள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com