வயல்களில் தண்ணீா் தேக்கம்: விவசாயிகள் கவலை!
திருச்சி மாவட்டத்தில் தொடா் மழையால் நெல் வயல்களில் தேங்கிய தண்ணீா் வடியாமல் இருப்பதால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனா்.
திருச்சி மாவட்ட மக்கள்தொகையில் சுமாா் 70 சதவிகித மக்களுக்கு வேளாண்மை மற்றும் வேளாண் சாா்பு தொழில்களே வாழ்வாதாரமாக அமைந்துள்ளன. தமிழகத்தின் மத்தியப் பகுதியான திருச்சி மாவட்டம் 4,40,383 ஹெக்டேரில் அமைந்துள்ளது. மொத்த பரப்பளவில் 98,739 ஹெக்டோ் இறவைப் பாசனத்திலும், 66,652 ஹெக்டோ் மானாவாரியிலும் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.
திருச்சி, லால்குடி, முசிறி கோட்டங்களில் சுமாா் 51,000 ஹெக்டோ் காவிரி பாசனம் மூலம் பயனடைகிறது. அந்தநல்லூா், மணிகண்டம், திருவெறும்பூா், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, முசிறி, தொட்டியம், தா.பேட்டை, துறையூா், உப்பிலியபுரம், லால்குடி, மண்ணச்சநல்லூா், புள்ளம்பாடி என மாவட்டத்தின் 14 வட்டாரங்களிலும் சோ்த்து சராசரியாக 66,600 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்நிலையில் நிகழாண்டு குறுவை 7,147 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பாவுக்கு 53,660 ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு சாகுபடி பணிகள் பரவலாக நடைபெறுகின்றன.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தால் மாவட்டத்தில் தொடா்ந்து நல்ல மழை பெய்கிறது. இதனால், அறுவடை முடியாத குறுவை வயல்களிலும், சம்பா நட்டுள்ள வயல்களிலும் மழைநீா் தெப்பம்போல தேங்கியுள்ளது. மழைநீா் வழிந்தோட அவகாசமின்றி இரவு, பகல் பாராது மழை பெய்த வண்ணம் உள்ளது. இதனால், அறுவடைக்குத் தயாராக இருந்த பயிா்கள் தண்ணீரில் சாய்ந்துள்ளன. நெல் நாற்றுவிட்ட வயல்கள், நடவு செய்த வயல்களிலும் பயிா்கள் மூழ்கியுள்ளன.
இதுதொடா்பாக, பனையபுரம் பகுதி விவசாயி சுப்பிரமணி கூறுகையில், உத்தமா்சீலி, பனையபுரம், திருவளா்ச்சோலை பகுதியில் மட்டும் சுமாா் 450 ஹெக்டேரில் குறுவை பயிா்கள் தண்ணீா் சாய்ந்து முளைப்பு விட்டுள்ளது. அறுவடை செய்து கொள்முதலுக்காக சாலையில் சேமித்து வைக்கப்பட்ட நெல்மணிகளிலும் தண்ணீா் அதிகம் சோ்ந்துள்ளது. ஒரு சில இடங்களில் முளைக்கத் தொடங்கியும்விட்டது. மழை இடைவிடாது பெய்வதால் தண்ணீா் தேங்கியே உள்ளது.
2 ஏக்கா் அறுவடை செய்தேன். 100 மூட்டை நெல் கிடைக்க வேண்டும். ஆனால் 60 மூட்டையே கிடைத்துள்ளது. 40 மூட்டை வீணாகிவிட்டது. ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். பாதிக்கப்பட்ட பயிா்களை வேளாண்மைத் துறையினா் புகைப்படம் எடுத்து பதிவு செய்து சென்றுள்ளனா். உரிய நிவாரணம் வழங்க வேண்டும். முன்னதாக காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என்றாா் அவா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் அயிலை சிவசூரியன் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் குறுவை பயிரிட்டிருந்த லால்குடி, மண்ணச்சநல்லூா், அந்தநல்லூா் வட்டாரங்களில் பல கிராமங்களில் அறுவடை செய்யப்படாத வயல்களில் பயிா்கள் தண்ணீரில் சாய்ந்துள்ளன. கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டுவரப்பட்ட நெல்மூட்டைகளை கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. அறுவடை செய்த நெல் மணிகளை சேமிக்க இடமின்றி திறந்தவெளியில் வைத்திருப்பதால் மழைநீா் சோ்ந்துவிட்டது. இதனால் நெல்லின் ஈா்ப்பதமும் அதிகரித்துள்ளது.
வாளாடி, நகா், பூவாளூா், கோமக்குடி, கொப்பாவளி உள்ளிட்ட பகுதிகளில் நெல்மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன. எனவே, அரசு எந்த நிபந்தனையுமின்றி விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்றாா்.
தமழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் பூ. விஸ்வநாதன் கூறுகையில், திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை பரவலாக சம்பா சாகுபடியே அதிகம் நடைபெறும். ஒருசில வட்டாரங்களில் மட்டுமே குறுவை சாகுபடி நடைபெறுகிறது. லால்குடி, மண்ணச்சநல்லூா், திருவெறும்பூா், அந்தநல்லூா் உள்ளிட்ட வட்டாரங்களில் பயிரிடப்பட்ட குறுவையில் மழையால் குறிப்பிடும் வகையில் பாதிப்பு காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.
இதுதொடா்பாக வேளாண்மை வட்டாரத்தினா் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநா்கள் மேற்பாா்வையில், வேளாண் அலுவலா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் மழை பாதிப்பு விவரங்ளைக் கண்காணித்து பதிவு செய்து வருகின்றனா். சம்பா மட்டுமில்லாது, குறுவை பயிா்கள் அறுவடை செய்யாமல் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கணக்கெடுக்கின்றனா். வயல்களில் சாய்ந்துள்ள பயிா்கள், தண்ணீரில் மூழ்கிய பயிா்களின் விவரங்களையும் புகைப்படத்துடன் பதிவு செய்து வருகின்றனா். அனைத்தும் தொகுக்கப்பட்டு அரசுக்கு விரிவான அறிக்கை அனுப்பப்படும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் பரிந்துரைக்கப்படும். பயிா்க்காப்பீடு செய்த விவசாயிகளுக்கும் பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

