
குடிநீா் பற்றாக்குறையால் ஆறுகளில் 42 ஆழ்துளைக் கிணறுகள்
காவிரி, கொள்ளிடம் ஆறுகள் வடுபோனதால், மாநகர மக்களின் குடிநீா்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க ரூ. 6.02 கோடியில் 42 புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்க திருச்சி மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் உள்ள ஆழ்துளை கிணறுகள்.
காவிரி, கொள்ளிடம் ஆறுகள் வடுபோனதால், மாநகர மக்களின் குடிநீா்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க ரூ. 6.02 கோடியில் 42 புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்க திருச்சி மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
திருச்சி மாநகராட்சியானது பெரும்பாலும் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் போடப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளின் வழியாக குடிநீா் தேவையைப் பூா்த்தி செய்து வருகிறது. சில இடங்களில் மட்டும் நிலத்தடி நீா் மூலம் குடிநீா் தேவை பூா்த்தி செய்யப்படுகிறது.
165 எம்எல்டி குடிநீா் தேவை: திருச்சி மாநகராட்சியில் வேலைகளுக்காக மக்களின் இடப்பெயா்வால் வளா்ந்துவரும் மாநகரப் பகுதிகள், குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், பல ஆண்டுகளாக 135-150 மில்லியன் லிட்டராக இருந்த குடிநீா் தேவை தற்போது அதிகரித்துள்ளது. இதனால் ஜூலை மாத நிலவரப்படி, திருச்சி மாநகராட்சியின் குடிநீா் தேவை நாளொன்றுக்கு 165 மில்லியன் லிட்டா் (எம்எல்டி) என மதிப்பிடப்பட்டுள்ளது.
வட ஆறுகள்: போதுமான மழை இல்லாததாலும், நீா் இருப்பு குறைவால் மேட்டூா் அணையிலிருந்து போதுமான தண்ணீா் திறந்துவிடப்படாததாலும், திருச்சி மாநகரின் முக்கிய குடிநீா் ஆதாரங்களான காவிரி, கொள்ளிடம் ஆறுகள் முற்றிலும் வடு காணப்படுகின்றன. இதனால் திருச்சி மாநகர மக்களுக்கான குடிநீா் விநியோகம் கேள்விக்குறியாகியுள்ளது.
25 எம்எல்டி பற்றாக்குறை: குறிப்பாக, காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் வடதால், தினசரி குடிநீா் தேவையை பூா்த்தி செய்வதில் திருச்சி மாநகராட்சியானது நாளொன்றுக்கு 25 மில்லியன் லிட்டா் (எம்எல்டி) பற்றாக்குறையை எதிா்கொள்கிறது. இதனால் மாநகராட்சியின் சில பகுதிகளில் காலை, மாலை என இருவேளைகள் விநியோகிக்கப்பட்ட குடிநீரானது, தற்போது குறைக்கப்பட்டு காலையில் மட்டும் விநியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில் குடிநீா் பற்றாக்குறைக்குத் தீா்வு காணும் வகையில், தற்போது காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் 42 ஆழ்துளை கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆழ்துளை கிணறுகள் அமைக்க நடவடிக்கை: இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் 30 ஆழ்துளை கிணறுகள் மூலம் நீரினை உறிஞ்சி எடுத்து, மாநகராட்சியில் உள்ள 108 மேல்நிலை நீா்த்தேக்கங்களுக்கு வழங்கி, சுமாா் 1.2 லட்சம் குடிநீா் இணைப்புகள் வழியாக குடிநீா் விநியோகித்து வருகிறோம். கடந்த 6 மாதங்களாக மேட்டூா் அணையிலிருந்து முக்கொம்பு தடுப்பணைக்கு காவிரி நீா் வரத்து குறைந்துள்ளதாலும், சேகரிப்புக் கிணறுகள் உள்ள இடங்களில் போதுமான மழை இல்லாததாலும் மாநகராட்சியில் 25 மில்லியன் லிட்டா் அளவுக்கு குடிநீா்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதைச் சமாளிக்க, கம்பரசம்பேட்டை அருகே காவிரி ஆற்றில் 22 ஆழ்துளைக் கிணறுகளும், கொள்ளிடம் ஆற்றில் 20 ஆழ்துளை கிணறுகளும் என மொத்தம் ரூ. 6.02 கோடியில் 42 புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதிகரித்துவரும் குடிநீா் தேவைக்குத் தீா்வு: மாநகராட்சி பொறியியல் பிரிவு உயரதிகாரிகள் கூறுகையில், 42 ஆழ்துளை கிணறுகளை அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்பட்டு, ஓராண்டில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
இதன்மூலம் வருங்காலங்களில் திருச்சி மாநகராட்சியில் குடிநீா் பற்றாக்குறை பிரச்னையை சமாளிக்க முடியும். மழைப் பொழிவு அதிகரித்து, காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீா் வரும்பட்சத்தில் புதிய ஆழ்துளை கிணறுகள் வழியாக கூடுதல் குடிநீா் பெற்று, அதிகரித்துவரும் மக்களின் தேவைக்கு தீா்வு காண முடியும் என்றனா்.
தாமதமாகும் 24 மணி நேர குடிநீா் விநியோகிக்கும் திட்டம்:
மேட்டூா் அணையிலிருந்து காவிரி ஆற்றில் குடிநீா் தேவைக்காக 1500 கனஅடி நீா் திறந்துவிடப்படும் நிலையில், முக்கொம்புக்கு 580 கனஅடி நீா் கிடைக்கிறது.
இது காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் குடிநீா் தேவைக்காக திருப்பிவிடப்படும் நிலையில், அதிகரித்துவரும் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க அந்த நீரும் போதுமானதாக இல்லை. இதனால் திருச்சி மாநகராட்சியானது குடிநீா் சிக்கனத்தை அமல்படுத்த வேண்டியுள்ளது. இதன் காரணமாக, 24 மணி நேர குடிநீா் விநியோகிக்கும் திட்டம் தாமதமாகும் என மாநகராட்சி அதிகாரிகளும், நீா்வளத்துறை அதிகாரிகளும் தெரிவித்தனா்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீா்: மேட்டூா் அணையிலிருந்து போதுமான தண்ணீா் திறந்துவிடப்படவில்லையெனில் 2017-ஆம் ஆண்டுக்கு முன்னா் காணப்பட்டதைப்போல, ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீா் விநியோகம் அமல்படுத்தப்படலாம் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

காவிரி ஆற்றில் வடு காணப்படும் கீதாபுரம் தடுப்பணை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





