திருவண்ணாமலை, டிச. 18: திருவண்ணாமலை நகரில் சுதந்திரமாக சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளது.
திருவண்ணாமலை நகரம், ஆன்மிகத் தலமாகவும், மாவட்டத் தலைநகராகவும் உள்ளது. திருவண்ணாமலை நகரம் புதுச்சேரி-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, கடலூர்-சித்தூர் நெடுஞ்சாலை ஆகியவற்றின் மையமாகவும் உள்ளது. இதனால் நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருவண்ணாமலை வழியாக செல்கின்றன.
மாதந்தோறும் பெüர்ணமி கிரிவலத்துக்காகவும், அண்ணாமலையார் கோயிலை காண்பதற்காகவும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் நகரின் முக்கிய சாலைகளான திண்டிவனம் சாலை, சின்னக்கடை தெரு, பஸ் நிலையம், போளூர் சாலை, செங்கம் சாலை, தேரடி வீதி, திருவூடல் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கால்நடைகள் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றன. கால்நடைகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு இரு சக்கர வாகன ஓட்டிகள் காயமடைகின்றனர். மேலும் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தெருக்களில் கால்நடைகள் திரிந்தால் பிடிக்கப்பட்டு நகராட்சி கொட்டடியில் அடைக்கப்படும். அவற்றின் உரிமையாளர்கள் ரூ. 1000 அபராதம் செலுத்தினால் தான் அவை விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
நகர்மன்றத் தலைவர் இரா.ஸ்ரீதரன் தலைமையில் கால்நடைகளை பிடிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. சில நாள்கள் வரை கால்நடைகளை பிடிக்கும் பணி நடைபெற்றது. தற்போது அப்பணி முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டதால் கால்நடைகள் சுதந்திரமாக திரிகின்றன.
கடந்த நவம்பர் மாதம் கார்த்திகை மகா தீபத்தின் போது லட்சக்கணக்கானோர் கிரிவலம் சென்றனர். அப்போது ஏராளமான கால்நடைகள் குறுக்கிலும் நெடுக்கிலும் சென்றதால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.
நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் கால்நடைகளை பிடிக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் மீண்டும் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.