செய்யாறு, டிச. 18: மின்சாரத்தை சிக்கனப்படுத்தினால் பணத்துடன் மின்சாரம் பல மடங்கு சேமிப்பாகும் என மின்வாரியத்தின் கோட்ட செயற்பொறியாளர் பி.சக்திசிவம் கூறினார்.
செய்யாறு ரோட்டரி சங்கம் சார்பில் செய்யாறு ஐ.டி.ஐ.யில் அண்மையில் நடைபெற்ற விழாவில், அவர் பேசியது:
நவீன மின்சக்தி சேமிப்புத் திறன் மிக்க உபகரணங்களையே அனைவரும் பயன்படுத்த வேண்டும். சாதாரண குண்டு பல்புகளுக்குப் பதிலாக சி.எப்.எல். எனும் கையடக்க குழல் பல்புகளை உபயோகித்தல், எலக்ட்ரானிக் சோக்குகளையும், மின்விசிறிகளில் எலக்ட்ரானிக் ரெகுலேட்டர்களையும் பயன்படுத்துதல் வேண்டும். மேலும், குளிர்பதன சாதனங்களையும் அவ்வப்போது பராமரிக்க வேண்டும்.
மின்மோட்டார்களில் அடிக்கடி ரீ-வைண்டிங் செய்யக் கூடாது. சூரிய ஒளியால் இயங்கும் குக்கர், நீர் சூடேற்றும் கருவிகளை உபயோகிக்கலாம்.
மரபு சாரா எரிசக்தியை முடிந்த அளவில் உபயோகிக்க வேண்டும்.
சரியான அளவு மின் கம்பிகளை உபயோகித்தல், மின்தூக்கிகளில் மின் சக்தி சேமிப்புக்கான நவீன உத்திகளை பயன்படுத்தலாம். இவ்வாறு செய்தால் மின்சாரம் சேமிக்கப்படும் என்றார் சக்திசிவம்.
விழாவில் செய்யாறு ரோட்டரி சங்கத் தலைவர் தி.எ.ஆதிகேசவன், ஐ.டி.ஐ. முதல்வர் கண்ணதாசன், உதவி செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.