திருவண்ணாமலை, ஜன. 22: திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி வளாகத்தில் நவீன நானோ எலக்ட்ரானிக்ஸ் ஆய்வகத்தை டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் தென்னிந்திய பிரிவு தலைவர் ஏ.கே.பட்டாபிராமன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்(படம்).
அப்போது அவர் பேசியது:
நானோ தொழில்நுட்பத்தால் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அனைத்துத் துறைகளிலும் நானோ தொழில்நுட்பத்துக்கு சிறந்த வாய்ப்பு உள்ளது. கல்லூரியில் திறக்கப்பட்டுள்ள நானோ ஆய்வகத்தால் மாணவர்களுக்கு பயன் உண்டு.
மாணவர்கள் பாடபுத்தகங்களில் பெறும் அறிவோடு, பல்வேறு வகைகளிலும் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் கு.கருணாநிதி தலைமை தாங்கினார். நானோ ஆய்வகத்தின் சிறப்புகள் குறித்து நானோ பேராசிரியர் மோகன்குமார் விவரித்தார்.
கல்லூரி முதல்வர் எஸ்.பாலசுப்பிரமணியன், இயக்குநர் சொ.குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
"கல்விதான் வாழ்க்கை தரத்தை உயர்த்தும்'
மாணவர்கள் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அதைப் பயன்படுத்தி மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். கல்விதான் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்று எம்எல்ஏ கு.பிச்சாண்டி கூறினார்.
கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் ஐங்குணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 300 மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள்களை வெள்ளிக்கிழமை வழங்கிப் பேசுகையில், அவர் இதனைத் தெரிவித்தார்.
விழாவுக்கு ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் ல.பெரியசாமி தலைமை தாங்கினார்.
ஊராட்சித் தலைவர் எம்.அய்யாசாமி, தலைமை ஆசிரியர் ச.அருணகிரி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வி.சிவசங்கரன், உதவித் தலைமை ஆசிரியர் பா.நாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.