அரக்கோணம், ஜன. 22: அரக்கோணத்திற்கு அருகே குருவராஜபேட்டையில் மாணவிகளை ஆசிரியை அடித்த சம்பவத்தில் சனிக்கிழமை அதே பள்ளியின் வேறு வகுப்புகளை சேர்ந்த மாணவிகள் குறிப்பிட்ட ஆசிரியைக்கு ஆதரவாக பள்ளியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரக்கோணத்தை அடுத்த குருவராஜபேட்டையில் உள்ள அரசினர் மகளிர் உயர்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு ஆசிரியையாக இருக்கும் ஜாக்குலின், மாணவிகளை தொடர்ந்து அடிப்பதாகவும் இதனால் பல மாணவிகள் காயப்படுவதாகவும் கூறி 6,7,8-ம் வகுப்பு மாணவிகள் வெள்ளிக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
இதை தொடர்ந்து அப்பள்ளிக்கு வந்த வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன், சம்பந்தப்பட்ட ஆசிரியையிடம் விசாரணை நடத்தி இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து மாணவிகள் வீடு திரும்பினர்.
இதனிடையே ஆசிரியை ஜாக்குலினுக்கு ஆதரவாக, அவர் சிறப்பாக வகுப்புகள் எடுப்பவர் அவரை பணியிடைநீக்கம் செய்யக்கூடாது எனக்கோரி அதே பள்ளியின் 9,10-ம் வகுப்பு மாணவிகள் சனிக்கிழமை வகுப்புகளை புறக்கணித்து பள்ளி வளாகத்தில் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், பள்ளியில் திடீரென மணியடிக்கப்பட்டு மாணவிகள் வீட்டுக்கு செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும் குறிப்பிட்ட வகுப்புகளின் மாணவிகள் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதையடுத்து, அங்கு வந்த கிராம நிர்வாக அதிகாரி நரசிம்மன் மாணவிகளிடம் தெரிவிக்கையில், சனிக்கிழமை மாவட்ட கல்வி அதிகாரியின் விசாரணைக்காக குறிப்பிட்ட ஆசிரியைகள் மற்றும் தலைமை ஆசிரியர் ஆகியோர் வேலூர் சென்றுள்ளதாகவும் திங்கள்கிழமை தலைமை ஆசிரியர் வந்தவுடன அவரிடம் தங்கள் தரப்பு நியாயத்தை நேரில் சொல்லலாம் எனவும் தெரிவித்ததை அடுத்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.