வந்தவாசி, ஜன. 22: வந்தவாசி போர் நடந்து 250 ஆண்டுகள் நிறைவு விழாவையொட்டி, வந்தவாசியில் சனிக்கிழமை வரலாற்று கண்காட்சி நடைபெற்றது.
பிரெஞ்ச் படை வசமிருந்த வந்தவாசி கோட்டையை கைப்பற்ற கி.பி. 1752-ல் மேஜர் லாரன்ஸ் தலைமையிலும், கி.பி. 1757-ல் கர்னல் ஆல்டர் தலைமையிலும் ஆங்கிலயே படையினர் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், ஆங்கிலேய படையினரின் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.
பின்னர் கி.பி. 1760-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதியன்று தளபதி சர் அயர்கூட் தலைமையில் ஆங்கிலேய படை மீண்டும் வந்தவாசி கோட்டையை தாக்கியது. இதில், தளபதி கவுண்ட் டி லாலி தலைமையிலான பிரெஞ்ச் படையினருக்கும், தளபதி சர் அயர்கூட் தலைமையிலான ஆங்கிலேய படையினருக்கும் இடையே கடும் போர் நடைபெற்றது.
இப்போரில் ஆங்கிலேய படையில் 1,700 பேரும், பிரெஞ்ச் படையில் 2,000 பேரும் போரிட்டனர். இதில், ஆங்கிலேய படை வெற்றி பெற்றது. இந்தப் போர் நடந்து 250 ஆண்டுகள் நிறைவு அடைந்துள்ளதையொட்டி, அதற்கான விழா வந்தவாசி கோட்டை அகழி அருகில் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி 2 தின வரலாற்று கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.
இதில், இந்திய மன்னர்கள் மற்றும் பிரிட்டிஷ், பிரெஞ்ச் படையினர் போர்களின்போது பயன்படுத்திய வாள்கள், ஈட்டிகள், பிச்சுவா கத்திகள், அக்காலங்களில் பயன்படுத்தப்பட்ட மண்ணெண்ணை விளக்குகள், ஓவியங்கள், குடிநீர் குடுவைகள் உள்ளிட்ட பழங்கால பொருள்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தைச் சேர்ந்த தென்னிந்திய கலாசார மற்றும் வரலாறு ஆராய்ச்சி மைய உறுப்பினர் ஆர்.சுந்தரம் என்பவர் தான் சேகரித்து வைத்துள்ள இப்பொருள்களை இக்கண்காட்சியில் பார்வைக்கு வைத்திருந்தார்.
வந்தவாசி பஸ் அதிபர் நாராயணமூர்த்தி கண்காட்சியை திறந்து வைத்தார். வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இக்கண்காட்சியை பார்வையிட்டனர்.
"வந்தவாசி போர் 250'-நூல் அறிமுகம்
விழாவையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மு.ராஜேந்திரன் மற்றும் கவிஞர் அ.வெண்ணிலா ஆகியோர் தொகுத்த வந்தவாசி போர் 250 எனும் நூல் அறிமுக விழா நடைபெற்றது.
விழாவுக்கு தெள்ளாறு ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஆர்.சீதாபதி தலைமை வகித்தார். கவிஞர் அ.வெண்ணிலா வரவேற்றார்.
கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா, பத்திரிகையாளர் ப.திருமாவேலன், பேராசிரியர் பாரதிபுத்திரன், எம்எல்ஏக்கள் ஜெ.கமலக்கண்ணன், கோ.எதிரொலிமணியன், ஒன்றியக்குழுத் தலைவர் எம்.எஸ்.தரணிவேந்தன், நகர்மன்றத் தலைவர் க.சீனுவாசன் உள்ளிட்டோர் நூல் குறித்து பேசினர். கவிஞர் மு.முருகேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.