திருவண்ணாமலை, ஜன. 29: கல்வியோடு, விளையாட்டுக்கும் மாணவர்கள், முக்கியத்துவம் தர வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோ.பாண்டியன் கூறினார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்றன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு சனிக்கிழமை பரிசுகளை வழங்கி, பாண்டியன் பேசியது:
விளையாட்டு மேம்பாட்டுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அக்காலங்களில் போதிய விளையாட்டு மைதானங்கள் இல்லாத நிலை காணப்பட்டது. இப்போது திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானம் நவீனமாகவும், வீரர், வீராங்கனைகளுக்கு சிறந்த பயிற்சிக் களமாகவும் உள்ளது. கல்வியோடு, விளையாட்டுக்கும் மாணவர்கள் முக்கியத்தும் தர வேண்டும். இரண்டிலும் சிறந்து விளங்கினால்தான் வளமான எதிர்காலம் கிடைக்கும் என்றார். மாவட்ட விளையாட்டு அலுவலர் க.புகழேந்தி, பயிற்சியாளர்கள் ஆ.முனுசாமி, ஜூலியன், விநாயகம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.