அடித்தட்டு மாணவர்களின் சமத்துவப் பேரொளியாக ஜெயலலிதா திகழ்கிறார்

குடியாத்தம், ஜூலை 3: பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் விதித்துள்ள புதிய நெறிமுறைகளுக்கு உயர்நீதி மன்றத்தில் தடை உத்தரவு பெற்று அடித்தட்டு மாணவர்களின
Published on
Updated on
1 min read

குடியாத்தம், ஜூலை 3: பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுமம் விதித்துள்ள புதிய நெறிமுறைகளுக்கு உயர்நீதி மன்றத்தில் தடை உத்தரவு பெற்று அடித்தட்டு மாணவர்களின் பொறியியல் கனவை நனவாக்கிய தமிழக முதல்வர் ஜெயலலிதா சமத்துவப் பேரொளியாகத் திகழ்கிறார் என இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவரும் எம்எல்ஏவுமான செ.கு. தமிழரசன்  கூறினார்.

குடியாத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

தமிழக பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வு மேற்கொண்டுள்ளது. பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைக்கு குறைந்தபட்ச மதிப்பெண்களாக தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், அருந்ததியர், மலைவாழ் பழங்குடியின மாணவர்களுக்கு 35 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினருக்கு 40 சதவீதமும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 45 சதவீத மதிப்பெண்களும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஏ.ஐ.சி.டி.இ.யின் புதிய நெறிமுறைப்படி ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களும் பொறியியல் சேர்க்கைக்கு 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

இந்த உத்தரவு தமிழகத்தில் இட ஒதுக்கீடு முறைக்கும், கலந்தாய்வுக்கும் தடையானது.

கடந்த மாதம் புதுதில்லி சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமரை சந்தித்து, இந்த விவகாரத்தில் ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடர வேண்டும் என வலியுறுத்தி விண்ணப்பமும் அளித்தார். 15 நாள்களாகியும் அந்த விண்ணப்பம் குறித்து பதில் எதுவும் இல்லை. இதனால் பொறியியல் படிக்க நினைத்த கிராமப்புற, அடித்தட்டு மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாக மாறியது.

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 29ஆம் தேதி வழக்குத் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான குறைந்தபட்ச மதிப்பெண் தகுதி நெறிமுறைகள், பின்பற்றப்படுவதற்கு அனுமதி அளித்தும், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் வகுத்துள்ள நெறிமுறைகளுக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே, சமூகநீதி காத்த வீராங்கனையாகத் திகழும் முதல்வர் ஜெயலலிதா, தற்போது அடித்தட்டு மாணவர்களின் பொறியியல் கனவை நனவாக்கியதின் மூலம் சமத்துவப் பேரொளியாகத் திகழ்கிறார் என்றார் தமிழரசன்.

அதிமுக மாவட்ட விவசாயப் பிரிவுச் செயவர் வி. ராமு, பேர்ணாம்பட்டு நகரச் செயலர் எல். சீனிவாசன், கே.வி. குப்பம் ஒன்றியச் செயலர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.