அரக்கோணம், ஜூலை 3: அரக்கோணம் நகரில் குற்றச் சம்பவங்கள் மற்றும் போக்குவரத்து பிரச்னைகளை தவிர்க்க, நகரின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படும் என டி.எஸ்.பி. சீத்தாராம் கூறினார்.
அரக்கோணம் நகர காவல்நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் டிஎஸ்பி சீத்தாராம் மேலும் பேசியது: அரக்கோணம் நகரில் போக்குவரத்து பிரச்னைகளை தவிர்க்க தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். மூன்றாவது கண் வாராவதியில் காவல்துறையினர் நிறுத்தப்பட்டு மக்களுக்கு அறிவுறுத்துவர். நகரின் ஒருவழிப்பாதை திட்டம் குறித்து ரயில்வே நிர்வாகத்துடன் பேச உள்ளோம்.
மேலும் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினரோடு பேசி, ஆட்டோ கட்டணம் நிர்ணயிக்க முடிவு செய்துள்ளோம்.
நகரில் 25 இடங்களில் அப் பகுதியினரை கொண்டு கமிட்டி உருவாக்கி அவர்கள் மூலம் 8 இடங்களில் தனியார் பாதுகாப்பு ஆள்களை பணியமர்த்த உள்ளோம். இவர்கள் பூட்டிய வீடுகள் மற்றும் தங்கள் பகுதிகளில் கண்காணித்து வருவார்கள். இப்பணியை இரவில் காவல் துறையினர் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தணிக்கை செய்வார்கள் என்றார் டி.எஸ்.பி. சீத்தாராம்.
கூட்டத்தில் டவுன் போலீஸ் ஆய்வாளர் சுரேஷ். தாலுகா ஆய்வாளர் குணசேகரன் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினர், கல்வி நிறுவன நிர்வாகிகள், வணிகர் சங்கத்தினர், அரிமா, ரோட்டரி சங்கத்தினர் பங்கேற்றனர்.