திருவண்ணாமலை, ஜூலை 3: ஜவ்வாதுமலை வனப் பள்ளியில் விரைவில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என அமைச்சர் அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
ஜவ்வாதுமலை ஒன்றியம் ஜம்னாமரத்தூரில் கோடை விழா நிறைவு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் கிருஷ்ணமூர்த்தி பேசியது:
முதல்வர் ஜெயலலிதா மக்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்களை தீட்டி வருகிறார்.
ஜவ்வாதுமலையில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும்.
ஆட்சியர் பொறுப்பேற்ற ஒரே வாரத்தில் திருவண்ணாமலை நகரம் தூய்மைப்படுத்தப்படும் என அறிவித்தார். அதன்படி செயல்பட்டு வருகிறார்.
ஜவ்வாதுமலை வனத் துறை பள்ளியில் விரைவில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும். இப்பகுதி மக்கள் அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மலைப் பகுதி மக்களுக்கு தேவையான மின்சாரம், குடிநீர், சாலை வசதிகள் செய்து தரப்படும். கடந்த ஆண்டு விழாவைக் காட்டிலும் தற்போது சிறப்பான கண்காட்சி ஏற்பாடு செய்ய்பட்டுள்ளது என்றார்.
பல்துறை பணிவிளக்க கண்காட்சியில் சிறந்த அரங்கு அமைத்தமைக்காக ஜவ்வாதுமலைவாழ் மக்கள் சங்க மேல்நிலைப்பள்ளி, வேளாண் பொறியியல் துறை, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மையங்களுக்கு முதல் மூன்று பரிசுகளும், வேலூர் விஐடி பல்கலை. மையத்துக்கு ஆறுதல் பரிசும் தரப்பட்டது. கோலப்போட்டியில் வென்ற வனிதா சமிளா, மஞ்சுபிரியாவுக்கும் பரிசளிக்கப்பட்டது.
விழாவுக்கு ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா தலைமை தாங்கினார். மாவட்ட கவுன்சிலர் வெள்ளையன், ஒன்றிய குழுத் தலைவர் கோவிந்தராஜன், மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாலசக்திதாசன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எச்.கணேசன், கோட்டாட்சியர் பூபதி, ஊராட்சித் தலைவர் சிவா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சி.மோகன், சோமசுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.