திருவண்ணாமலை, ஜூலை 3: திருவண்ணாமலை நகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக நகராட்சி ஆணையர் (பொ) ஜெயவேல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் மத்திய அரசின் அரசிதழில் பிளாஸ்டிக் பொருள்களைத் தடை செய்வது குறித்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் வேளாண்மை மற்றும் கையாளுதல் விதிகள் 2011-ன்படி 40 மைக்ரான் அளவுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளை உற்பத்தி செய்யவும், இருப்பு வைக்கவும் விநியோகம் செய்யவும் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்தடையை அமல்படுத்தும் பொருட்டு மாவட்ட ஆட்சியரால் நடத்தப்பட்ட கலந்தாய்வுக் கூட்டத்தில் வர்த்தக நிறுவனங்கள், பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்துவதற்கு கடந்த 25ஆம் தேதி வரை அவகாசம் தரப்பட்டது. அதன்பின் 40 மைக்ரான் அளவுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்வதுடன், அபராதம் விதித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். மேலும் இத்தடையை மீறுவோருக்கு ஓன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது குறித்த காலக்கெடு முடிந்து விட்டதால் அனைத்து வர்த்தக நிறுவனங்கள், மற்றும் மக்களுக்கு பயன்பாட்டில் உள்ள திருமண மண்டபங்கள், இதர இடங்களில் மேற்படி பொருள்களை பயன்படுத்தக் கூடாது. விற்பனை செய்யவும் கூடாது. மீறினால் எந்த முன்னறிவிப்பும் இன்றி பறிமுதல் செய்வதுடன் அபராதம், நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஜெயவேல்.