வேலூர், ஜூலை 3:வேலூரில் பள்ளிக்குச் சென்ற பிளஸ் 1 மாணவியர் மூவரை கடத்திச் சென்றதாக 4 இளைஞர்கள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
வேலூர் தனியார் பள்ளி மாணவியர் மூவர் அப்பள்ளியில் நடைபெற்ற பிளஸ் 1 சிறப்பு வகுப்புக்கு சனிக்கிழமை சென்றனர். அவர்கள் மாலை வரை வீடு திரும்பாத நிலையில், பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்துள்ளனர்.
சிறப்பு வகுப்புகள் மதியமே முடிந்துவிட்டதால் அனைத்து மாணவியரும் பள்ளியில் இருந்து சென்றுவிட்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர் வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
போலீஸôர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், காரில் இம்மாணவியரை சில இளைஞர்கள் கடத்திச் சென்றதாகத் தெரியவந்தது. அதையடுத்து மாவட்டம் முழுதும் போலீஸôர் உஷார்படுத்தப்பட்டனர்.
சனிக்கிழமை இரவு காவேரிபாக்கத்தை அடுத்த பானாவரம் ரயில்வே கேட் பகுதியில் சாம்பல் நிற கார் ஒன்று ரயில்வே கேட் மூடியிருந்ததால் நின்றது.
அக்காரை போலீஸôர் சோதனையிட்டதில், காணாமல் போன மாணவியர் மூவரும் அந்த காரில் இருந்தனர்.
காரை ஓட்டிச் சென்ற வேலூர், தியாகராஜபுரத்தை சேர்ந்த பிரகாஷ் (21) உள்பட 4 இளைஞர்கள் அந்த காரில் இருந்தனர். அனைவரும் பானாவரம் காவல் நிலையத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.
பின்னர் வேலூர் தெற்கு காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
இரவு மாணவியர் உடனடியாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். பிடிபட்ட இளைஞர்கள் பிரகாஷ் (21), சங்கரன்பாளையத்தைச் சேர்ந்த சரவணன் (21), சந்தோஷ் (19), சீனிவாசன் (23) ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் மாணவியரை ஏமாற்றி கட்டாயத் திருமணம் செய்வதற்காக அழைத்துச் சென்றது தெரியவந்தது. அதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தோஷின் தந்தை காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிகிறார்.