திருவண்ணாமலை, ஜூலை 3: திருவண்ணாமலையில் முன்விரோதம் காரணமாக, இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை சட்டநாயக்கன் தெருவைச் சேர்ந்த அரங்கநாதன், தேனிமலை அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனையில் மெக்கானிக்காகப் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கிருபா செங்கம் நீதிமன்றத்தில் உதவியாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவர்களது இளைய மகன் சிவகார்த்தி (23), திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.லிட் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கும் திருவண்ணாமலை பே கோபுரத் தெருவைச் சேர்ந்த பூத்தை என்ற சீனிவாசனுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு சிவகார்த்தி தனது நண்பன் திருமணத்தில் பங்கேற்க திருவூடல் தெருவில் சென்றார். அப்போது அங்கு வந்த சீனிவாசனுக்கும் அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து, சீனிவாசனின் நண்பர்கள் நாராயணன், ராஜதுரை, கடப்பாவைச் சேர்ந்த பிரசாந்த் ஆகியோர் சேர்ந்து சிவகார்த்தியை தாக்கினராம். அப்போது சிவகார்த்தி கத்தியால் குத்தப்பட்டார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தகவலின்பேரில் ஊரக டிஎஸ்பி சேகர், டவுன் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி ஆகியோர் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருவண்ணாமலை நகர போலீஸôர் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பி ஓடியவர்களைத் தேடி வருகின்றனர்.